மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டிலும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, நீதிபதிகள் பி.ஆர். காவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி மீது இ.பி.கோ. 499 பிரிவின் கீழ் அதிகபட்ச தண்டனையான இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாலேயே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை உறுதிப்படுத்த முடியாத சிக்கலான அதேவேளையில் ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கில் அதிகபட்ச தண்டனை எதற்காக விதிக்கப்பட்டது என்பதை விசாரணை நீதிபதி தெளிவுபடுத்தவில்லை.
ஒரு அரசியல் வாதி பொதுவெளியில் எப்படி பேசவேண்டும் என்று சூரத் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள அறிவுரையில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அதேவேளையில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட தீர்ப்பில் எதற்காக அதிகபட்ச தண்டையான இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மனுதாரரின் பதவி பறிக்கப்பட்டதுடன் அவருக்கு வாக்களித்த வாக்களார்களின் உரிமையில் தலையிடுவதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் உரிய காரணமின்றி அதிகபட்ச தண்டனை வழங்கிய விசாரணை நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.