மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ராகுல் காந்திக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து அவரது எம்.பி. பதவி பறிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மோடி அரசு மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகரை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.