புதுடெல்லி: சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய பாட்மின்டன் வீரர் பிரன்னாய், அர்ஜூனா விருதுக்கு தனது பெயரை எதற்காகப் பரிந்துரை செய்யவில்லை என்று பொங்கியுள்ளார்.

தனது சக வீரர் சமீர் வர்மா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதில், தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையென்றுள்ள அவர், ஆனால், தன் பெயர் விடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் ஒற்றையரில் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் கலப்பு பிரிவில் தங்கம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார் 27 வயதான பிரன்னாய். ஆனால், இவரின் பெயர் இந்தாண்டின் அர்ஜூனா விருது பரிந்துரைப்புப் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது.

ஆனால், காமன்வெல்த் போட்டியிலேயே பங்கேற்காத மற்றும் சீனியர் பிரிவில் எந்தப் பதக்கமும் வெல்லாத சமீர் வர்மாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரன்னாய் கூறியுள்ளதாவது, “எனது பெயரை சமீர் வர்மா, சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருடன் சேர்த்து நான்காவது பெயராக பரிந்துரை செய்திருக்கலாம். சமீர் வர்மா எனது சக வீரர். எனவே, அவரின் பெயரை பரிந்துரை செய்ததில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், என் பெயர் எதனால் விடுபட்டது என்பதுதான் கேள்வியே.

நான் எதிர்த்துக் கேள்வி கேட்பதால், எனது பெயரை தொடர்ந்து கருப்புப் பட்டியலிலேயே வைத்துள்ளனர். விருதுக்காக தனித்து விண்ணப்பிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி செய்தால், விருதுக்காக பிச்சையெடுப்பது போன்ற தோற்றம் உருவாகும்” என்றுள்ளார் பிரன்னாய்.