சென்னை: கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன, இது நீதிமன்ற அவமதிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், திமுக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது விதி எண் 55ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை அவைத்தலைவரிடம் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார் கலைவாணர் அரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இநத் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை. எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், அரசு அதுகுறித்து விசாரிக்காமல், கொடநாடு பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என கூறுகிறது. கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் செயல்.
கோடநாடு விஷயத்தில் அதிமுக பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. ஆனால், திமுக அரசு, அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்த கொடநாடு விவகாரத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்கஇவ்விவகாரத்தை திமுக சட்டப்பேரவையில் விவாதிக்கிறது” என்று கூறியவர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதை சட்டப்பேரவையில் விவாதிக்கலாமா? நீதிமன்ற அதிகாரத்தை சட்டப்பேரவையோ, சட்டப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது.
மேலும் இதுதொடர்பாக செய்தியளார்களை எழுப்பிய கேள்விக்கு, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இதை நீதிமன்றத்தில் சென்று சொல்லுங்கள். இது தெளிவான நீதிமன்ற அவமதிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.