கரூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 3வது நாளாக கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது தமிழக அரசின் ஊழல் குறித்தும், தமிழக முதல்வரின் ஊழல் குறித்தும்  ஏன் விசாரிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள  நிலையில், ‘தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரடிப் பிரசாரத்தை  தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 3 நாட்கள் பிரசாரத்திற்காக தமிழகம் வந்துள்ளதாக ராகுல், ஏற்கனவே. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு  இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று கரூரில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுலுக்கு வழிநெடுக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடையே உரையாற்றிய ராகுல், மத்திய மாநில அரசுகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்கள் மூலம்,  நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டடங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியதுடன்,  நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம் என்றார்.

தேசத்தைப் பார்த்தால், கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியவர்,  நாம் இன்று,  பலவீனமான இந்தியா, பிளவுபட்ட இந்தியா, பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாடு முழுவதும் வெறுப்பை பரப்புகின்ற ஒரு இந்தியாவைத்தான்  பார்க்கிறோம் என்றவர், நமது நாட்டின்  மிகப்பெரிய பலம், நமது பொருளாதாரம். அது தற்போது இடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து தமிழகஅரசை விமர்சித்து பேசியவர்,  தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேறியுள்ளது என அதிமுக பிரசாரம் செய்துவருகிறது. ஆனால், மோடி அரசின் நடவடிக்கையான,  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் தமிழகத்தில் வளர்ச்சி குன்றிவிட்டது  என்றும் , தமிழர்களின் மொழி மற்றும் இனத்திற்கான தனித்துவத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை என்று கூறியதுடன், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசில் நடைபெற்று வரும் ஊழல் குறித்து இதுவரை விசாரணை நடத்தவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், அதற்கு ஈடாக தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு என்ன கொடுத்தார் என்று வினவினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல்வாதி என்று விமர்சித்த ராகுல், அவருக்கு பிரதமர் மோடி உதவி செய்து வருகிறார் , அதற்காக  இந்த மாநில மக்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.