டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.

பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் நான்கு நாட்கள் நிறுத்திவைக்கப்பட்ட இந்த விமானத்தில் இருந்தவர்களிடம் அந்நாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இதில் 95 பேர் குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பெரும்பாலானோர் சென்றுள்ளனர்.

அமெரிக்காவுக்குள் ஊடுருவதை ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு இவர்கள் சென்றுள்ளனர். இதுபோன்று சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவல் மேற்கொள்வது இது முதல் முறை அல்ல.

அதேபோல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பதும் இவர்கள் அறியாமல் நடைபெறுவதாத் தெரியவில்லை.

கடும் குளிர், முள்வேலிகள், உயரமான மதில் சுவர்கள் என அனைத்து தடைகளையும் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவது குறித்த பயிற்சி வகுப்புகளும் சந்தடி இல்லாமல் நடைபெற்று வருவதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

தவிர, வெளிநாட்டில் ஆங்கிலம் பேச IELTS உள்ளிட்ட ஆங்கில மொழி பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு தரமாக வழங்கப்படுகிறது என்பது இதுபோல் சட்டவிரோதமாக சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட பேசமுடியாமல் திணறியதில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.

இதில் பெரும்பாலும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேற்றத்துக்கு ‘டாங்கி ரூட்’ என்று கூறப்படுகிறது.

-30 டிகிரி செல்சியஸ் உறைபணியில் குழந்தைகளுடன் சென்று வழியிலேயே மரணித்த குடும்பங்கள் மற்றும் மதில் சுவரை ஏறமுடியாமல் விழுந்து இறந்த நபர்கள் குறித்த விவரங்கள் அறிந்த நிலையிலும் இந்த ‘டாங்கி ரூட்’ எனப்படும் வெவ்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவும் முயற்சியில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வருகிறார்கள்.

சொந்த நாட்டில் சொந்த மாநிலத்தில் தங்கள் வாழ்க்கை தரம் சிறப்பாக இல்லை என்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகள் இல்லை என்றும் காரணம் கூறி இவர்கள் இந்த நாடுகளில் குடியேற துடிக்கின்றனர்.

இவர்களின் இந்த அவல நிலையை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சர்வதேச ஆள்கடத்தல் கும்பல் வெவ்வேறு நாடுகள் மூலம் இவர்களை அமெரிக்கா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றன. அதற்காக சிலர் மாதக்கணக்கில் கூட வேறு நாடுகளில் தங்கவைக்கப்படுகின்றனர்.

ஊடுருவல் முயற்சியில் சிக்கிக்கொண்ட போதும் அமெரிக்க சிறைகள் இந்தியாவின் வாழ்க்கை தரத்தை விட சிறந்ததாகவே உள்ளதாக இவர்கள் நம்புகின்றனர்.

தவிர விவசாயம் சார்ந்த வேலைகளில் இந்தியாவில் கிடைக்கும் பணத்தை விட அமெரிக்காவில் தோட்ட வேலை உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளுக்கு கிடைக்கும் ஊதியமும் அதிகம் வேலை நேரமும் குறைவு என்று கூறும் இவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களின் வாழக்கைத் தரத்தோடு தங்களை ஒப்பிட்டு பார்த்து எப்படியாவது வெளிநாடுகளுக்கு செல்லும் முடிவை மேற்கொள்கின்றனர்.

சமீபத்திய அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தரவுகளின்படி, நவம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, 96,917 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30,010 பேர் கனேடிய எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது இந்த தரவுகள் மூலம் தெரியவருகிறது. 2019-20ல் 19,883 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-21ல் 30,662 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர், 2021-22ல் இந்த எண்ணிக்கை 63,927 ஆக இருந்தது.

கடும் குளிரில் குழந்தையுடன் படேல் குடும்பத்தினர் மரணத்திற்குப் பிறகும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் இந்த நடைமுறையை செயல்படுத்தும் முகவர்களின் பரந்த நெட்வொர்க் குறித்து குஜராத்தில் உள்ள அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 276 இந்தியர்களிடம் மும்பை விமான நிலையத்தில் தீவிர விசாரணை…