ஐதராபாத்

காங்கிரஸ் கட்சியில் நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா இணைய உள்ளார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன ரெட்டி ஆந்திர மாநில முதல்-மந்திரியாக உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  சர்மிளா காங்கிரஸ் கட்சியில் ர் இணைய இருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த ஒரு மாதத்திற்குள் அவர் இணைய உள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புவதாகக் கூறப்படுகிறது.

சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக நாளை டெல்லி சென்று மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள்,

”காங்கிரஸ் கட்சியில் ஒய்.எஸ். சர்மிளா இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சி கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் நலனுக்காக அயராது உழைத்து வருகின்றது. நாங்கள், ஆந்திராவில் காங்கிரஸை ஒரு முக்கிய கட்சியாக பார்க்கவில்லை . காங்கிரசுக்குக் கடந்த முறை 1.25% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.  தற்போது. சர்மிளாவைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் இன்னும் சில சதவீத வாக்குகள் பெறுவார்கள் ” 

என்று தெரிவித்துள்ளனர்.