கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே, தனித்து நின்ற பாஜக, கோவை தெற்கு தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், ‘மய்ய’ நடிகரின் கட்சிக்கும் அத்தொகுதியில் அதிக வாக்குகள் கிடைத்தன.

இந்நிலையில், அத்தொகுதியை குறிவைத்து, தொடக்கம் முதலே அதிமுகவிடம் பேசிவந்தது பாஜக. இந்த செய்திகள் ஊடகங்களிலும் பரவலாக வெளியாகின. இந்தமுறை அங்கே வானதியை நிறுத்தி, எப்படியும் கைப்பற்றி விடுவது என்று பாஜக திட்டம் தீட்டுவது வெளிப்படையான செய்தியாக இருந்துவந்த நிலையில், அதிமுகவும் அத்தொகுதியை பாஜகவிடம் கொடுத்துவிட்டது.

அந்த தொகுதியில், எதிர்முகாமில் இருந்தவர்கள் அதிக வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர்கள் இன்று இணைந்திருக்கும் சூழலில், கமலஹாசன் அத்தொகுதியை குறிவைக்கலாம் என்ற நிலையில், அத்தொகுதியை திமுகவே தன் பொறுப்பில் எடுத்திருக்க வ‍ேண்டும். ஆனால், கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் காங்கிரசிடம் அத்தொகுதியை தள்ளிவிட்டுள்ளது திமுக.

பாஜகவோ அல்லது கமலோ வென்றுவிடலாம் என்ற கருத்து லேசாக வலுப்பெற்றிருக்கும் சூழலில், திமுக நேரடியாக அங்கே களமிறங்கியிருந்தால் நிலைமை வேறாக அமைந்திருக்கும். ஆனால், இப்படி ஒரு சிக்கலான தொகுதியை, எதற்காக கூட்டணி கட்சியிடம் தள்ளிவிட்டது என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.