திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றவர்களுக்கே வெறும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்திவரும் வந்தவாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராஜனுக்கும் 1 தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக.
இத்தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் நிற்கவுள்ளார் முருகவேல்ராஜன்.
தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்த முருகவேல்ராஜன், கடந்த 2001-2006 முதல், பாமக சார்பில் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதனையடுத்து, ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின்னர் தனிக் கட்சியைக் கண்டார்.
தேவேந்திரகுல மக்களில் ஒரு பிரிவினர், நீண்டநாட்களாக கோரிவரும் ‘வேளாளர்’ என்ற பட்டத்தை, அதிமுக-பாஜக அரசுகள் அவர்களுக்கு உறுதிசெய்துள்ளன. எனவே, அந்த சமூகத்தின் வாக்குகளில் பெரும்பகுதி அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த, தனிக்கட்சி நடத்திவரும் ஒரு பிரமுகருக்கு, சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தை வழங்குவதன் மூலம், அச்சமூக வாக்குகளை தன் பங்கிற்கு தானும் கவர முயல்கிறதா திமுக? என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
ஏனெனில், முந்தைய தேர்தல்களில் பிரதான கட்சிகள், கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் போன்றவர்களுக்கு இடங்களை வழங்குவதன் மூலம், அச்சமூக வாக்குகளை கவர முயன்றுள்ளன. தற்போது, அந்த இடத்திற்கு முருகவேல்ராஜன் வந்துள்ளார்!