சென்னை: தவெக தலைவர் விஜய் இன்னும் முதல்வராக பதவி ஏற்காத நிலையில், அவருக்கு காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பை கவர்னர் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், ஜோசப் விஜய் வீட்டிற்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதுடன், நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தவெகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விஜயின் தவெக அதிக இடங்களை பிடித்துள்ள நிலையிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டவில்லை. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டமன்றம் உருவாகி உள்ளது. . இதற்கிடையில் 5 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, பல ஆண்டுகால நட்பான, திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதனால், தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் ஆதரவு தருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மைக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு காவல்துறை தரப்பில், அதிக இடங்களை பெற்றுள்ள விஜய் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில், அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சருக்கு இணையான பலத்த பாதுகாப்பு மற்றும் அதிகாரப்பூர்வ கான்வாய் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், கவர்னர் அர்லேகர் சென்னை வந்த நிலையில், நேற்று கான்வாய்க்கான அனுமதி அதிரடியாக ரத்து செய்தார். “தலைவர் இன்னும் முதல்வராகப் பதவியேற்காத நிலையில், அவருக்கு எப்படி அரசு கான்வாய் வழங்கப்படலாம்?” என ஆளுநர் மாளிகை தரப்பில் அதிருப்தி கிளம்பியதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி, நேற்று (மே 6 இரவு) திடீரென அந்த வாகனங்கள் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு தனி வாகனத்தில் சென்றார். இதுரு அவரது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தவெக ஆட்சி அமைக்க 47 இடங்களை வைத்துள்ள அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தர முன்வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய் ஏற்கனவே பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடமாட்டோம் என்று கூறிய நிலையில், தற்போது அதிமுக ஆதரவு இன்றி ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
[youtube-feed feed=1]