புதுடெல்லி:
சுதந்திர தின உரையில், ‘எதிரிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது’ என, பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ‘சீனாவின் பெயரை ஆட்சியாளர்கள் குறிப்பிட அஞ்சுவது ஏன்’ என, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று, 74வது சுதந்திர விழா கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையில் கொடியேற்றியபின், 90 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார் மோடி. அதில், சீனா மற்றும் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல், ‘எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து, நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரை இந்தியாவுடன் மோத நினைத்தவர்களுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியில் நமது வீரர்கள் தக்க பதிலடி தந்துள்ளனர்’ என்றார்.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளதாவது:

இந்திய ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் குறித்து, 130 கோடி இந்தியர்களும், காங்., தொண்டர்களும் பெருமைப்படுகிறோம். நம் மீதான தாக்குதல்களுக்கு அவர்கள் தக்க பதிலடி வழங்கியுள்ளனர். ஆனால், சீனாவின் பெயரை உச்சரிக்க நம் ஆட்சியாளர்கள் அஞ்சுவது ஏன்? என, யோசிக்க வேண்டும். நேற்று நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. சீன படைகளை எவ்வாறு பின்னுக்கு தள்ளி நமது பிராந்திய ஒருமைப்பாட்டை எவ்வாறு பாதுகாக்க போகிறீர்கள் என அரசிடம் கேட்க வேண்டும்.

நேரு, வல்லபாய் படேல் மற்றும் பிற சுதந்திர போராட்ட வீரர்களால் அமைக்கப்பட்ட ‘தன்னிறைவு’ திட்டம் பற்றி பேசுபவர்கள், 32 பொதுத் துறை நிறுவனங்களை விற்றுள்ளனர். ரயில்வேயையும், விமான நிலையங்களையும் தனியாரின் கைகளுக்கு தந்துள்ளனர். தற்போது எல்.ஐ.சி., மற்றும் எப்.சி.ஐ.,யை தாக்கியுள்ளனர். இவர்கள் இந்நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பார்களா என கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.