டெல்லி:  டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்  11 நாட்களே  உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும்,  மக்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்து வாக்கை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் பிப்ரவரி 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் ஜனவரி 7ந்தேதி அன்று அறிவித்தார். அதன்படி, டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பிப்ரவரி 8ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ள ஆம்ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள களமிறங்கி உள்ளது. அதே வேளையில் அங்கு மீண்டும் தங்களது கட்சியின் ஆட்சியை கொண்டு வர பாஜக, காங்கிரஸ் கட்சி கடும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தலைநகர் டெல்லியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகளுக்கு உச்சபட்ச போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் வாக்காளர்களை கவர பல்வேறு இலவசங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளதுடன், மக்களை கவரும் வகயைல் அனல் பறக்கும் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக  டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?  என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சியாக உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம்ஆத்மி பாஜக இடையே நேரடி போட்டி எழுந்துள்ள நிலையில், கடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற முடியாமல், மக்களால் புறக்கணிப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை எப்படியும் தனது முத்திரையை பதிக்கும் வகையில் தேர்தல் உத்திகளை கையாண்டு மக்களை சந்தித்து வருகிறது.

கடந்த 2015, 2020 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி இந்த முறை  எப்படியும் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் களமாடி வருகிறது.  அதனால் அங்கு தேர்தல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில்  பாஜக கடைசியாக 1998ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சி செய்தது. அதன் பின்னர்  நடைபெற்ற இரு சட்டமன்ற தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வருகிறது. இதனால், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வெறிகொண்டு களப்பணியாற்றி வருகிறது. அதை ஈடுகட்டும் வகையில், ஆம்ஆத்மி கட்சியும் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே மதுபான ஊழல் தொடர்பாக ஆம்ஆம்மி தலைவர் கெஜ்ரிவால் உள்பட  பலர் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ள நிலையில், அதை சுட்டிக்காட்டி பாஜக மக்களை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்து வரும் ஆம்ஆத்மி, மத்திய பாஜக அரசு, மாநில அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறி வருகிறது.

அதேவேளையில் காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி  ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், வாக்குறுதியை நிறைவேற்றாதது, வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி 1998 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லியை ஆட்சி செய்தது. முதலமைச்சராக ஷீலா தீட்சித் இருந்தார்.  அதைத்தொடர்ந்து கட்சியை வழி நடத்திய தலைமையின் திறமையின்மை. உள்கட்சி பூசல்  போன்றவற்றால்,  ஆட்சியை இழந்ததுடன், மக்களின் மனதில்இருந்தும்  துடைதெறியப்பட்டது.  கடந்த 112 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் கோலோச்சிய காங்கிரஸ் கட்சி,  அதன் பிறகு நடைபெற்ற  2013, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின்  வாக்குகள்  அப்படியே ஆம் ஆத்மிக்கு சென்று விட்டதால், அக்கட்சி ஆட்சியை எளிதில் பிடித்து, இன்று கோலோச்சி வருகிறது.  இழந்த வாக்குகளை மீட்க காங்கிரஸ் கட்சி முழுமையான ஈடுபாட்டுடன் இந்த தேர்தலில் மீண்டும் போராடி வருகிறது. தங்களுக்கான இடத்தை கைப்பற்ற களப்பணியாற்றி வருகிறது.

கடந்த   2013ஆம் ஆண்டு  தேர்தலின்போது, 29.5 சதவிகித வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி  2015ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் 54.3 சதவிகித வாக்குகளைப் பெற்று டெல்லி மக்கள்மனதில் தனக்கென தனி சிம்மாசத்தை ஏற்படுத்திக்கொண்டது. அதேவேளையில் 2013 தேர்தலின்போது,  24.6 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி 2015 சட்டமன்ற தேர்தலின்போது, வெறும்  9.7 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்று, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போனது.  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலும் வந்தது. இந்த தேர்தலிலாது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் யுத்தியை பயன்படுத்தி, தனது 100ஆண்டு கால பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் என பார்த்தால்,  போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பெரும் தோல்வி பெற்றதுடன்,  வெறும்  4.26 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்த 2020 தேர்தலில் ஆம் ஆத்மி அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுகிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியதுடன், தனது வாக்கு வங்கியை  53.57 சதவிகித உயர்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில்தான் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதில் மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தல் தொடர்பாக  டெல்லி காங்கிரஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி வீடுகளில் இருந்து வெளியே வந்து டெல்லியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டும். ஒரு புறம் வெறுப்பை கொண்டுள்ள சக்திகள் உள்ளன. இன்னொருபுறம் அன்புடன் கூடிய சக்தி உள்ளது. ஒரு புறம் நரேந்திர மோடி இருக்கிறது. இன்னொருபுறம் ராகுல் காந்தி இருக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, பாஜகவை மட்டுமே குறிப்பிட்டு களப்பணியாற்றி வருவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசுமீது மக்களிடையே அதிக அளவிலான வெறுப்பு இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவும் விமர்சிக்கப்பட்டு கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக  ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காவல்துறையின் ஆதரவு மற்றும் பாதுகாப்புடன் பாஜகவினர் டெல்லி மக்களை அச்சுறுத்துகின்றனர். வெளிப்படையாக ரவுடிகள் ஆதரவுடன் செயல்படுகின்ற னர். இவை அனைத்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் நடைபெற்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக மோசமாகத் தோற்றது. இந்த முறையும் பாஜக மிக மோசமாக தோற்கும்,”என்று கூறியுள்ளார்.

ஆம்ஆத்மி கட்சி, நேரடியாக பாஜகவை விமர்சித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை சாடி வருகிறது.  பாராளுமன்ற தேர்தலின்போது ஆம்ஆத்மி, காங்கிரஸ் இரண்டும் இண்டியா கூட்டணியில் இருந்த நிலையில், தற்போது ஆட்சி மீதான மோகத்தால் கூட்டணி தர்மத்தை மீறி தனித்து போட்டியிடுகின்றன.

பாஜக முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி கூறும்போது,  டெல்லி தேர்தலில் தனது கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாகவும், 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 46 முதல் 52 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இவர் டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில்,  நாங்கள் 46-52 இடங்களில் வெற்றி பெறுவோம்” என்று கூறியதுடன்,  கெஜ்ரிவால் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதன் காரணமாக பதவியைப் பெற்ற அதிஷியை “தற்செயலான முதல்வர்” என்று பிதுரி விவரித்தார்.

“கட்சி எனக்கு நிறைய கொடுத்துள்ளது. பா.ஜ.,வின் முதல்வர் யார் என்பதை, எங்கள் கட்சியின் பார்லிமென்ட் குழு, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்வார்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படூத்தி உள்ளது. முதல் முறை வாக்காளர்களிடமும், இளைஞர்கள் மத்தியிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அங்கு மீண்டும் ஆம்ஆத்மியே ஆட்சியை பிடிக்கும் என சில ஆய்வு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கெஜ்ரிவால்  ஆட்சிமீதான ஊழல் குற்றச்சாட்டும் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

டெல்லியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பிப்ரவரி மாதம் 8ந்தேதி அன்று தெரிய வரும்.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார்..