பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய உலக சுகாதார குழுவினரை அனுமதிக்க மறுத்த சீனா தற்போது, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனா சென்றடைந்தது. அங்கு சில நாட்கள் தனமைப்படுத்துதலுக்கு பிறகு, ஆய்வை தொடங்க உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஓராண்டை கடந்தும், தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த உயிர்க்கொல்லி . கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.
ஆனால், உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்கு சீனா அனுமதி மறுத்து வந்தது. இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவுக்கு கடந்த வாரம் சீனா அனுமதி வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது. சீனாவில் உள்ள வுகான் சென்றடைந்த நிபுணர்கள் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து 2 வார காலம் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு வைரஸ் உருவானது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.