பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் எழுப்பப்பட்டுள்ளது.
தன் நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்த சிறிதுநேரத்தில், நியூசிலாந்தின் இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், நாட்டு மக்களுக்கு இருமுறை உரையாற்றி, அமைதி நிலவ வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறார்.
ஆனால், புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து, நாடே கொந்தளிப்பிலும் பரபரப்பிலும் இருக்கும்போது, நாட்டின் ஒரு தேசியப் பூங்காவில், படப்பிடிப்பில் இருக்கிறார் இந்தியப் பிரதமர்.
வெறும் 38 வயதேயானவர் நியூசிலாந்தின் இளம் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என்ற இடத்தில், சிறுபான்மையினர் மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து, 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சிறிதுநேரத்தில், 2 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றி, அமைதி காக்க வேண்டுகோள் விடுத்து, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையும் உறுதி செய்கிறார் அவர்.
ஆனால், நம் நாட்டிலோ, காஷ்மீர் மாநில புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து, நாடே கொந்தளிப்பான சூழலில் இருந்தபோதும், ஒரு தேசியப் பூங்காவில், படப்பிடிப்பில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார் இந்தியப் பிரதமர் மோடி. அதுதொடர்பாக அவர் அதிகம் பேசியது தேர்தல் சம்பந்தமான கூட்டங்களில்தான்.
காஷ்மீர் சம்பவத்தையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் அப்பாவி காஷ்மீரிகளின் மீது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து ஒருவாரத்திற்குப் பிறகுதான், அமைதி காக்க வேண்டுமென திருவாய் மலர்ந்தருளினார் மோடி.
2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது, அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை, மவுனப் பிரதமர் என்று விமர்சித்தார் மோடி. ஆனால், 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது, உடனடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி, அமைதி காக்க வேண்டினார் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்தியப் பிரதமர், மக்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சினையிலும் உடனடியாக தலையிட்டு, நிலைமையை சரிசெய்பவராகவோ அல்லது குறைந்தபட்சம் ஆறுதலேனும் கூறுபவராகவோ இதுவரை நடந்துகொண்டதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
டெல்லியில் பல நாட்களாக நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டம், கஜா புயல் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்ளிட்ட எத்தனையோ விஷயங்களை உதாரணமாகக் கூறலாம்.
– மதுரை மாயாண்டி