டில்லி,

டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சுகேஷ் சந்தர் என்ற நபரை  போலீசார் கைது செய்தனர்.

இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு ஒதுக்க தரகராக அவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தி விசாரணையில்,  அதற்காக ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டு ரூ.1.30 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரை கைது செய்த போது அவரிடத்தில் ரூ. 60 லட்சம் பணத்தை டில்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தொழிலதிபர், தரகர்  என பல்வேறு முகங்களை கொண்டு சுகேஷ் சந்தர்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது தற்போது வெளியாகி வருகிறது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சுகேஷ் சந்தர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இது மட்டுமின்றி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் 12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு கருணாநிதியின் பேரன் என்று கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் மோசடி செய்தவன். சில நேரங்களில் அழகிரி உறவினர் என்று கூறி மோசடிகளை அரங்கேற்றியுள்ளான்.

இவன் மீது தென் மாநிலங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களின் முதலமைச்சர்களின் உறவினர் என்று கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளான்.

கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் இரு நபர்களிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளான்.

இதுபோன்ற மோசடி செய்வதற்காக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பவனி வந்தவன்.

மலையாள திரைப்பட நடிகை லீனாவுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளான். திரைப்படம் மட்டுமின்றி விளம்பர மாடல்களில் நடிக்க வைப்பதாகவம் கூறி அவளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.

இவன் ஒரு மோசடி பேர் வழி என்று தெரிந்தும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லீனாவும் சுகேஷ் சந்திரசேகரை காதலித்துள்ளார். திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் 2015ம் ஆண்டு மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா மற்றும் அவரது காதலர் சுகேஷ் சந்தர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2013 –ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி 19 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளான். இந்த வழக்கில் நடிகை லீனாவும், சுகேஷ் சந்திரசேகரும் கைது செய்யப் பட்டனர்.

போலி ஆவனங்களை பயன்படுத்தி ரூ.19 கோடி ரூபாய் சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் ஆணுறை காண்ட்ராக்ட் வாங்கித்தருவதாக ரூ.65 லட்சம் மோசடி சொகுசு கார் மோசடி என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது.

லயன் டேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணமோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பெங்களூருவில் சுகேஷ் சந்தர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.