இந்த விவாதம் எப்போதோ வந்த ஒன்றுதான் என்றாலும், இதற்கு இப்போதும் எந்த காலஅளவும் கடந்துவிடவில்லை. ஏனெனில், இவருவருக்குமான மோதல், முன்னைவிட இப்போது உக்கிரமடைந்து நிற்கிறது.
“பன்னீர் செல்வம் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை, எளிதாக நழுவிவிட்டுவிட்டு இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், பழனிச்சாமியோ, தனக்கு வராதுவந்த மாமணியாய் கிடைத்த வாய்ப்பை, உடும்பைப் போன்று இறுக்கமாக பிடித்துக்கொண்டார். அந்தவகையில், பன்னீர் செல்வத்தைவிட, அரசியல் ஆளுமையும், சாமர்த்தியமும் அதிகம் கொண்டவர் பழனிச்சாமியே” என்ற கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், எந்தவொரு விஷயத்தையுமே அலசும்போது, முன்னாலும் பின்னாலும் உள்ள காரணிகளை ஆராய்ந்து, எடைப்போட்டு பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பதே அறிவுக்கு உகந்தது மற்றும் சார்பற்றது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, பன்னீர் செல்வம் பதவிக்கு வந்த காலம் என்பது, சசிகலா, சர்வ வல்லமையுடன் வெளியே இருந்த காலகட்டம். ஜெயலலிதாவிடம் எப்படி அடிபணிந்து பழகினார்களோ, அதன்படியே, சசிகலாவிடமும் அடிபணிந்து பழகியவர்கள்தான் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும்.
அனைவரும் காலில் விழுந்து, பணிவான வேண்டுகோள் விடுத்து, பொதுச்செயலாளர் ஆக்கிய சின்னம்மாவின் கட்டளையை மீறி, முதல்வர் பதவியில் தொடர்வதென்பது பன்னீர் செல்வத்தால் முற்றிலும் முடியாத காரியம். பின்னாலிருந்து, ராஜினாமா செய்யாதீர்கள்! என்று என்னதான் பாஜக தரப்பிலிருந்து கூறப்பட்டாலும், சசிகலாவை எதிர்ப்பதென்பது அவருக்கு பழக்கமில்லாத ஒன்று. எனவே, சட்டென்று கடிதம் கொடுத்துவிட்டார்.
அதன்பிறகு, ஆடிட்டர் தரப்பிலிருந்து வேறுவகையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, தர்மயுத்த நாடகமெல்லாம் நடந்தது வேறு கதை!
இப்போது பழனிச்சாமிக்கு வருவோம். இவர் முதல்வரானபோது, சசிகலா சிறையில் இருந்தார். தனக்கு பதிலாக டிடிவி தினகனரை, தனது பிரதிநிதியாக வைத்துவிட்டுச் சென்றார்.
“நேரடியாக ஜெயலலிதாவின் அறைக்குச் சென்று அவரின் நாற்காலியிலேயே அமர்ந்தவர் பழனிச்சாமி. மேலும், தான் இன்னொருவருக்கு பதிலாக இடைக்கால முதல்வர் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அவர் தன்னை நிரந்தர முதல்வராகவே நினைத்துக்கொண்டார். இந்த எண்ணம் இருந்ததால், அவர்தான் மேலதிக அரசியல் ஆளுமை மிக்கவர்” என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே, இருமுறை முதல்வராக இருந்தபோது நடந்துகொண்ட பழக்கதோஷம்கூட, பன்னீர் செல்வத்தை, மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றபோது, ஜெயலலிதாவின் அறைக்கு செல்லவிடாமல் தடுத்திருக்கலாம். அப்போது, சசிகலா சர்வ வல்லமையோடு வெளியேதான் இருந்தார் என்பதை இப்போதும் நினைவுக்கு கொண்டுவருதல் அவசியம்.
பன்னீர் செல்வத்தின் இன்னொரு மிகப்பெரிய பலவீனம், அவர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவராகவே இருந்தது. இதனால், அவருக்கென்று தனியாக ஒரு ஜாதிய லாபி உருவாக முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால், அவருக்கான ஜாதிய லாபி கூட அவரின் சோதனை காலத்தில், அவருக்கான துணையாக வந்திருக்கலாம். இன்னொன்று, பன்னீர் செல்வத்தை பதவியிறக்கிவிட்டு, அந்த இடத்தில் சசிகலா அமர்வதால், முக்குலத்தோர் சமூகம் மத்தியில் எந்த குறிப்பிடத்தக்க அதிருப்தியும் வந்துவிடப்போவதில்லை.
ஆனால், இங்கே பழனிச்சாமியின் கதை சற்று வித்தியாசமானது. தன்னை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செலவினங்களை பார்த்துக்கொள்வதாக கூறியே, கோடிகளை இறைத்தே, முதல்வர் பதவியில் அமர்ந்தார் என்ற தகவல் உண்டு. சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட, காசு கொடுத்திருக்கிறோம் மற்றும் இன்னும் கொடுப்போம் என்ற தைரியம் அவருக்கு என்கிற விமர்சனமும் மறக்க முடியாதது!
இதில் இன்னொரு முக்கிய விஷயம், அவருக்கான ஜாதிய லாபி! கடந்த 1920களின் பிற்பகுதியில், அவரின் சமூகத்தைச் சேர்ந்த சுப்பராயன் எதிர்பாராத அரசியல் திருப்பத்தால், சென்னை ராஜதானியின் பிரதமராக சில ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பிறகு, பழனிச்சாமியின் சமூகத்தில் யாருக்கும் அந்த வாய்ப்பு அமையவில்லை.
தற்போது, கிடைத்தற்கரிய வரமாய் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தமிழ்நாட்டின் முதல்வர் பதவி கிடைத்ததை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த சமூகத்தின் முதலாளிமார்கள். கடந்த 2001ம் ஆண்டு, ஜெயலலிதாவின் பதவியை உச்சநீதிமன்றம் ரத்துசெய்த பின்னர், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த பொன்னையனுக்கு அந்த வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார்கள் அவர்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.
தற்போது, பழனிச்சாமியை நோக்கி அதிர்ஷட காற்று வீசியதில், அவரைவிட அகம் மகிழ்ந்தவர்கள் கொங்கு வேளாள கவுண்டர் சமூக முதலாளிகள்தான். ஏனெனில், அவர்களுக்கு இதனால் பல பல நன்மைகள்!
அவர்கள், ஒரு தீவிரமான ஜாதிய லாபியைக் கட்டமைத்து, பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்த களமிறங்கினார்கள். இதில், இன்னொரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்று, அமித்ஷா குழுவினரிடம், அண்டை மாநிலத்தின் ஆளுநர் பதவியைப் பரிசாகப் பெற்ற, பழனிச்சாமியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், முதல்வருக்கான டெல்லி லாபியை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டார்.
உங்களுக்கு விருப்பமான அனைத்தையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதற்கு, நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற வாக்குறுதிகள் பாஜக தலைமைக்கு தரப்படுகின்றன!
இதில், இன்னொரு விஷயம் என்னவென்றால், பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்து, திமுகவிற்கு சாதகமாக நிகழ்வுகள் திரும்புவதை பாஜக தலைமை துளியளவுகூட விரும்பவில்லை என்பதும் பழனிச்சாமி தப்பிப் பிழைக்க ஒரு முக்கிய காரணம்.
இப்போது, நாம் இன்னொரு காட்சிக்கு வருவோம். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகளுக்கு உத்தரவாதம் அளித்து, செங்கோட்டையனை ஓவர்டேக் செய்து, முதல்வர் பதவியில் பழனிச்சாமி அமர்ந்த சிறிது காலத்தில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் வருகிறது. அத்தேர்தலில் வேறு யாரையாவது போட்டியிடச் செய்வார் தினகரன் என்று எதிர்பார்த்த நிலையில், முதல்வர் பதவியைக் குறிவைத்து தானே களமிறங்க முடிவு செய்கிறார்.
இதில், பழனிச்சாமிக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி என்றாலும், சசிகலாவின் பிரதிநிதியான டிடிவி தினகரனை, அவராலும், அவரின் ஆதரவு கொங்கு அமைச்சர்களாலும் எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆர்கே நகரில் தினகரனுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்கள்.
இதற்கிடையில், பன்னீர் செல்வத்தைப் பயன்படுத்தும் பாஜக, இரட்டை இலையை முடக்குகிறது. அதிமுக என்ற பெயரும் இல்லை. ஆனாலும், தினகரன்தான் ஆதிக்கம் செலுத்துகிறார். தொப்பி சின்னத்தில், அவருக்காக வாக்குவேட்டை நடத்துகிறது பழனிச்சாமி & கோ.
தேர்தலில், தான் விரும்பிய மதுசூதனன் தேறமாட்டார் என்பதை அறிந்துகொண்ட பாஜக, சில காரணங்களை முன்வைத்து, தேர்தலையே ரத்துசெய்கிறது. இதனையடுத்து, பழனிச்சாமி குழுவினருக்கும் சில சிக்னல்கள் தரப்படுகின்றன. அதன்பிறகே தைரியம் பெற்ற அவர்கள், தினகரனுக்கு எதிராக பேசத் தொடங்குகிறார்கள்.
ஆனால், மோதிப் பார்த்துவிடுவது என்று தினகரனும் முடிவு செய்யவே, அவரை சிறைக்கு அனுப்புகிறது டெல்லி. இப்போதுதான் எடப்பாடி குழுவினர் முழுமையாக நிம்மதியடைகிறார்கள். ஆக, தினகரனை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு இவ்வளவு உதவி தேவைப்படுகிறது மற்றும் இவ்வளவு கால அவகாசம் வேண்டியிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அதன்பிறகு, தினகரன் சிறையிலிருந்து மீள்வதற்குள், இவர்கள், பாஜகவின் ஆதரவுடன் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும், சிறையிலிருந்து வெளிவந்த, எந்த ஆதரவும் இல்லாத தினகரனை, 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கிறார்கள். பின்னர், பலவாறு சிரமப்பட்டு, பல இடங்களில் உதவியைப் பெற்று அந்த எண்ணிக்கையை 18ஆக குறைக்கிறார்கள்.
பன்னீர் செல்வம் அணியினர் இணைந்த பிறகும், இவர்களின் ஆட்சி நீடிப்பதில் நிறைய சட்ட சிக்கல்கள் வருகின்றன. ஆனால், பாஜக மற்றும் உயர்நீதிமன்ற & உச்சநீதிமன்றங்களின் வெளிப்படையான உதவியுடன் தனது பதவிகாலத்தை ஆபத்தின்றி நகர்த்துகிறார் பழனிச்சாமி.
பாஜக விரும்பிய வேளாண் சட்டங்கள், சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை உள்ளிட்ட பலவற்றுக்கு இவரின் அரசாங்கம் ஆதரவு தருகிறது.
இப்போது, இன்றைய நிலைக்கு வருவோம். சசிகலா சிறை மீண்டுவிட்டார். ஆனால், சட்டமன்ற தேர்தல் வரை, அவரின் விடுதலையை எப்படியேனும் தள்ளிப்போட வேண்டுமென்று பழனிச்சாமி அணியினர் செய்யாத முயற்சிகளே இல்லை. அபராதத் தொகையை செலுத்திவிடாதபடி, பல்வேறு தடுப்பணைகளைக் கட்டினார்கள். ஆனாலும், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
நான்காண்டு காலம் முதல்வராக இருந்தும்கூட, சிறையிலிருந்து வெளிவந்துள்ள சசிகலாவை எதிர்க்கும் வல்லமையைப் பெறாதவராகத்தான் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஜனவரி 27ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பை நிகழ்த்திய பழனிச்சாமி, இப்போது, அந்த நினைவிடத்தையே திடீரென மூடியுள்ளார் சசிகலாவிற்கு பயந்து. தனது காரில் அதிமுக கொடியுடன் பயணிக்கும் சசிகலாவை கண்டு இன்னும் இன்னும் பதறுகிறார்.
இதுவரை, சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் சக்தியில்லாதவராகத்தான் இருக்கிறார். இவரது தலைமையில், கட்சியின் வாக்குவங்கி முதன்முதலாக 18% என்ற அளவிற்கு இறங்கியதையும் கவனிக்க வேண்டும்.
சசிகலாவை வரவேற்று தொடர்ந்து பல இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் தொடர்பாக இவரால் எதுவுமே செய்ய இயலவில்லை. “தன்னை முதல்வர் வேட்பாளராக, பன்னீர் செல்வம் வாயாலேயே அறிவிக்க வைத்துவிட்டார்” என்பதைக் காரணமாக சொல்லி, இவரை ஒரு சிறந்த ராஜதந்திரி என்று புகழும் நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவிப்பு கேலிக்குறியதாக மாறும் அறிகுறிகள் தெளிவாகவே தென்படுகின்றன.
ஆக, சசிகலாவின் முன்னால், பன்னீர் செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவருமே பலவீனமானவர்கள்தான்! தனக்கு கிடைத்தப் பதவியை, நீண்டநாள் தக்கவைக்கும் சூழல் பன்னீர் செல்வத்திற்கு இயல்பாகவே வாய்க்கவில்லை. ஆனால், பழனிச்சாமிக்கு நிறைய சாதகங்கள் இருந்தன. இப்போது, சசிகலா வெளியில் வந்திருக்கும் சூழலில், பழனிச்சாமியின் பிடி தளர்ந்து வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. சசிகலா தமிழ்நாட்டில் நுழைந்தபிறகு, கள நிலவரம் இன்னும் களேபரமடையலாம்! சந்தர்ப்ப சூழலால் வாய்ப்பைப் பெற்றவர் என்றுதான் பழனிச்சாமியை நடுநிலை விமர்சகர்கள் பார்க்கிறார்களே ஒழிய, அவரை ஒரு தலைவராகவோ அல்லது ஆளுமையாகவோ பார்க்கவில்லை!
எனவே, பன்னீர் செல்வத்தைவிட, பழனிச்சாமி சிறந்த ஆளுமை மற்றும் திறமை மிக்கவர் என்று கருதுவது ஒரு தவறான மதிப்பீடே..!
– மதுரை மாயாண்டி