சென்னை:
ஜெயலலிதா மறைந்து, அவரது உடல் அடக்கம் செய்த மறுநாளே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.
இது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவு குறைத்து பல்வேறு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது சொத்து குறித்தும் பல்வேறு ஐயங்கள் கிளம்பி உள்ளது.
இதற்கிடையில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு, 48 மணி நேரம்கூட கடந்திராத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சாதாரண ஒரு பெண்மணியை சந்தித்து ஆலோசனை நடத்துவது கேலிக்குறியதாக தெரிகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் தற்போது அவரது தோழி சசிகலா வசித்து வருகிறார். நேற்று அவரை, தமிழக அமைச்சர்கள் சரோஜா, ராஜலட்சுமி, வளர்மதி, வீரமணி, காமராஜ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சென்று வந்தனர். இது பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இன்று காலை 11.30 மணியளவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டன் சென்றார். அவருடன் 5 கார்களில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, மணிகண்டன் உள்பட முக்கிய அமைச்சர்களும் சென்றிருந்தனர்.
போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள சூழலில் அது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தாரா? அல்லது வேறு முக்கிய பிரச்சினை குறித்து விவாதித்தார்களா? என்று தெரியவில்லை.
இதற்கிடையே சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளும் போயஸ் கார்டனுக்கு சென்று வந்தனர்.
தமிழக அமைச்சர்கள் அங்கு சென்று விவாதித்து கட்சி பணியாக இருக்கலாம்… ஆனால் மாநில அரசு அதிகாரிகள் தற்போது போயஸ் தோட்டம் செல்ல வேண்டிய காரணம் என்ன? என்ன நடக்கிறது அங்கே… ? இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே முதல்வர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகத்திற்கிடமான கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வரும் வேளையில் அதற்கேற்றார்போல்
தமிழக அரசு அமைச்சர்களும், அதிகாரிகளும் நடந்துகொள்வது, எரிகிற நெய்யில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளது.