டில்லி, 

“வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.  கடந்த ஆண்டு யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பின் சார்பில் உலகக் கலாச்சார திருவிழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியால் நதியின் படுகைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. அதை சீர்செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்படும் என்றும் நிபுணர் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் கடந்தவாரம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் என்பவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மத்திய அரசையும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தையும் சாடியிருந்ததை  பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அதாவது சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டதென்றால் அதற்கு முழுப்பொறுப்பு அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயமும், மத்திய அரசும்தான் காரணம் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில்  கூறியிருந்தார்.

மேலும் அவர், யமுனை நதியின் படுகை வலுவற்றதாகவும், சுத்தமாகவும் இருப்பதாகக் கருதியிருந்தால் விழா நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி தராமல் இருந்திருக்கலாமே என்றும் ரவிசங்கர் தெரிவித்திருந்தார்.

இதுதான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதிக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.