சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு கடும் போட்டியாக இருந்த ஒரு நபர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
அவர் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் இளைய மகன் அசோக் சிகாமணிதான் என்பது தகவல்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முறைகேட்டுப் புகார்களுக்கு பெயர் பெற்றது. இதற்கான நிர்வாகிகள் தேர்தல் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் ஒருவழியாக தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால், இந்த விஷயத்தில் தொடக்கம் முதலே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவரும், ரூபா குருநாத்தின் தந்தையுமான ஸ்ரீனிவாசன் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தினார். தன் மகளுக்குப் போட்டியாக வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்.
எனவே, அசோக் சிகாமணியிடம் துணை தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சமாதானம் பேசப்பட்டு, அவரை சம்மதிக்க வைத்து, ரூபா போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டாராம். இதனையடுத்து, பேசப்பட்டதைப் போன்று அசோக் சிகாமணி துணைத்தலைவர் ஆகியுள்ளார்.