சென்னை: வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற கணினி நிபுணர்கள் யார்? என தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் காமிரா உதவியுடன் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சியினரும் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேவையற்ற ஆட்கள் வந்துபோவதாகவும், வாகனங்கள் சென்று வருவதாகவும் மடிக்கணினியுடன் வெளியாட்கள் சென்று வருவதாகவும் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நெய்வேலியில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் கணினி நிபுணர்கள் 3 பேர் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
நெய்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தெரிவிக்கப்படாத காரணங்களுக்காக என்ற காரணம் சொல்லி கணினி நிபுணர்கள் மூன்று பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, அந்த கட்டடத்திற்குள் சென்றிருக்கிறார்கள்
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சூழ்ச்சி செய்து திருத்த முடியாது என தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில், அதற்கு வழி அமைத்து கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள முயற்சிகள், தேர்தல் ஆணையம் கூறும் கருத்து மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது”
என கூறியுள்ளார்.