வாஷிங்டன்,

10ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்ப்பதாக இன்போசிஸ் அறிவித்ததற்கு  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது டிரம்பின் அரசியலுக்கு கிடைத்த  வெற்றியாகும் என்றும் கூறி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும்  எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய டிரம்ப், சில  நிறுவனங்கள்,  சிக்கன நடவடிக்கை என்ற பெயரில்  அமெரிக்கர்களை விலக்கிவிட்டு, வெளிநாட்டவர்களை  எச்1பி விசா நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளன. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் வகையில்,  எச்1பி விசா சட்டதிருத்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் இந்த மசோதாவின்படி, எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

இதன் காரணமாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதில் கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

இந்த மசோதா மூலம் இந்தியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல இன்போசிஸ் நிறுவனம், தனது அமெரிக்க கிளைக்கு 10ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாறிகை வரவேற்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது டொனால்டு டிரம்பின் அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறி உள்ளது.