இப்போது நாடு முழுதும் பாகுபலி கட்டப்பா பிரபலம். தனது நடிப்பில் ரசிக்கவைத்தார் கட்டப்பா சத்யராஜ். அதே போல தனது ருசியால் நம்மைக் கவர்வது கடப்பா.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும்  குறிப்பிட்ட சில பதார்த்தங்கள் புகழ்பெற்று விளங்கும். அது போல தஞ்சை, குடந்தை பகுதிகளில் பிரபலமானது கடப்பா.

சாம்பார் + குருமா சுவையில் வித்தியாசமாக இருக்கும் இந்த பதார்த்தம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் இப்பகுதியில் புழக்கத்துக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.  இட்லி, தோசை, சசப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையான சைட் டிஷ் இது.

ஒரு முறை செய்து சாப்பிட்டீர்களானால், உங்கள் வீட்டின் ரெகுலர் மெனுவில் கடப்பா இடம் பெற்றுவிடும்.

இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்:

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு:  1/4 கப்

உருளைக்கிழங்கு (வேக வைத்தது):  2  

பெரிய வெங்காயம்:  1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி:  சிறிது

உப்பு:  தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய்:  1/4 கப்

பூண்டு:  4 பற்கள்

பச்சை மிளகாய்: 1

சோம்பு:  1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய்:  2 டீஸ்பூன்

கடுகு :  1 டீஸ்பூன்

பட்டை:  1/4 இன்ச்

கிராம்பு:  2

பிரியாணி இலை:  1

கறிவேப்பிலை :  சிறிதளவு

செய்முறை:

1.   வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.

2.  மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, மண்ணீர் ஊற்றி நன்கு நைசாக  அரைத்துக் கொள்ளுங்கள்.

3. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கி மசித்து, தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு,  அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு பிரட்டி விடுங்கள்.

5.  பச்சை வாசனையானது போனதும், அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவுங்கள்.

சுவையான கடப்பா தயார்!

– சுந்தரி