“மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் தான் வீர் சவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

“வீர் சாவர்க்கர்: பிரிவினையைத் தடுக்கக்கூடிய மனிதன்” என்ற பெயரில் உதய் மஹூர்கர் மற்றும் சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார், இந்த விழா டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “சாவர்க்கருக்கு எதிராக நிறைய பொய்கள் பரப்பப்பட்டன. அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன் பல கருணை மனுக்களை தாக்கல் செய்தார் என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

உண்மை என்னவென்றால், பொதுவாக ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு. அவர் தனது விடுதலைக்காக தானாக இந்த மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் கருணை மனு தாக்கல் செய்தார்.

சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு மகாத்மா காந்தி வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரத்திற்காக நாங்கள் அமைதியாக செயல்படுவது போல் சாவர்க்கரும் செயல்படுவார் என்று காந்தி சொன்னார்” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது “பிரிவினைவாதத்தை மக்கள் மத்தியில் அப்போது தூண்டிவிட்டனர், இதற்கு எதிராக சாவர்க்கர் பலமாக குரல்கொடுத்தார், பின்னோக்கிப் பார்த்தால், சாவர்க்கரைப் பின்பற்றி பலரும் அவரது கருத்தை உரக்கக் கூறியிருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது” என்றார்.

மகாத்மா காந்தி மற்றும் இந்திய பிரிவினை குறித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல்.

“ஜெயிலில் இருந்த சாவர்க்கருடன் மகாத்மா காந்தி எப்படி பேசினார் அல்லது எப்போது பேசியிருக்க முடியும் ? இருவரும் அப்போது எங்கு இருந்தார்கள் ?” என்று கேள்வியெழுப்பினார்.

“மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் பிரிட்டிஷாருடன் ஐக்கியமாகிவிட்டார்” என்றும் “1925-ல் இந்திய பிரிவினை எனும் இரு தேச கொள்கை குறித்து முதன் முதலில் பேசியவர் சாவர்க்கர்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பதிலடி கொடுத்திருக்கிறார்.