டில்லி:
உச்சநீதிமன்றத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதும் கர்ணன் புகார்களை தெரிவித்ததை அடுத்து பரபரப்பு உச்சத்தைஅடைந்தது. கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். மேலும் தனக்கு மனநல பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவில்லை.
இந்த நிலையில் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பதிலுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் திண்டாடுகிறார்கள். கர்ணன் நேற்று ஆந்திராவில் உள்ள காளஹஸ்திக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கு காவல்துறையினர் செல்கிறார்கள்.