சென்னை:

மிழகத்தில் உள்ள சட்டவிரோத பார்களை எப்போது மூடுவீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளோடு மட்டுமல்லாது பல இடங்களில் சட்டவிரோதமாகவும் பார்கள் அமைக்கப்பட்டு, மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், கடந்த 2 மாதங்கள் முன்பு விசாரணையின் போது, சட்டவிரோத பார்களை கட்டுப்படுத்த சட்டதிருத்தம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை அளித்து வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தமிழக அரசக்கு, பார் தொடர்பான  சட்டதிருத்தம் என்ன ஆனது என்றும் , ‘சட்டவிரோத பார்களை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ; சட்டதிருத்தம் எப்போது என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினர். சட்ட விரோத பார்களின் மீதான அபராதத்தை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து வழக்கில் ஆஜரான டாஸ்மாக் வழக்கறிஞர், ‘மசோதா தயார் செய்து, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கு காத்திருக்கிறோம்,’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து அரசு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பதிலளிக்க 2 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.