விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ ஜனவரி 9, 2026, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகாது என்றும், தங்களின் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நேற்றிரவு அறிவித்தது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனி நீதிபதியின் தீர்ப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் பெஞ்ச் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளதாலேயே தேதி குறிப்பிடாமல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கின் முழு விவரம் :
டிசம்பர் 18, 2025 அன்று தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில் படத்தில் சில நீக்கங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு, படத்திற்கு “UA” சான்றிதழ் வழங்க பரிசீலனைக் குழு பரிந்துரைத்துள்ளதாக டிசம்பர் 22ம் தேதி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பொருத்தமற்றதாக இருக்கக்கூடிய மத உணர்வுகளின் சுருக்கமான சித்தரிப்பு, துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு மற்றும் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான மற்றும் நீடித்த சண்டைக் காட்சிகள் மற்றும் கொடூரமான காட்சிகள் ஆகியவை படத்தில் இருப்பதே, “UA” சான்றிதழ் வழங்கப்படுவதற்கான காரணம் என்று CBFC பிராந்திய அலுவலகம் அதில் தெரிவித்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று திருத்தப்பட்ட பதிப்பு டிசம்பர் 24, 2025 அன்று மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 29ம் தேதி தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தணிக்கை சான்று வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதை அடுத்து 2026 ஜனவரி 6ம் தேதி அதன் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
ஜனநாயகன் படத்தை உலகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி 5000 திரைகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கான சான்றிதழ் நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதப்படுத்தப்படுவதாகவும், இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
நீதிபதி பி.டி. ஆஷா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அன்று, திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர மனுவை அனுமதித்த நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வெங்கட கே நாராயணா ஆகியோர் ஆஜரானார்கள்.
ஜனவரி 5, 2026 அன்று, நாராயணாவுக்கு பிராந்திய அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில், திரைப்படத்தின் உள்ளடக்கம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும்,
ஆயுதப் படைகளின் சித்தரிப்பு குறித்தும் வந்த ஒரு புகாரின் அடிப்படையில், சினிமா சான்றிதழ் விதிகள் 24-இன் படி, தகுந்த அதிகாரி திரைப்படத்தை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிப்படுத்தப்படாத மற்றும் தெளிவற்ற ஒரு புகாரின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை மீண்டும் தொடங்குவது தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று வாதிடப்பட்டது.
திரைப்படம் பொதுமக்களுக்கு வெளியிடப்படாத நிலையில், குழு உறுப்பினர்களால் மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும்போது, திரைப்படத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு புகார் வருவது சந்தேகத்திற்குரியது மற்றும் விளக்க முடியாதது என்றும் வாதிடப்பட்டது.
இதுபோன்ற அநாமதேயப் புகார்களை ஏற்றுக்கொள்வது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அற்பமான மற்றும் உள்நோக்கம் கொண்ட ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு வழிவகுக்கும் என்றும் வாதிடப்பட்டது.
குழு ஏற்கனவே தனது முடிவை எடுத்து, சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்த பிறகு, விதி 24-ஐப் பயன்படுத்த முடியாது என்றும் மேலும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் மேலும் மூன்று மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாகவும், தமிழ் பதிப்பிற்கு சான்றிதழ் பெற்ற பின்னரே, மற்ற மொழிகளிலும் திரைப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனவரி 9-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், திரைப்படம் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டதற்குக் காரணமான புகார்களைச் சமர்ப்பிக்குமாறு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை புதன்கிழமைக்கு (ஜனவரி 7) ஒத்திவைத்தது.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தணிக்கை குழுவில் இருக்கும் நபரே படத்தின் மீது புகார் கொடுத்தார்’ என தணிக்கை வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி தரப்பில், ‘UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும்” என கூறப்பட்டது. “மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்டுள்ள புகார் நிலைக்கத்தக்கதல்ல” என்றார்.
தணிக்கை வாரியம் தரப்பில், “ஜனநாயகன் படத்தில் அனுமதியின்றி பாதுகாப்பு படையினரின் லட்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை மறு ஆய்வுக்கு உத்தரவிட தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உண்டு” என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]