டெல்லி:

டெல்லி காவலர்களை பாதுகாக்க கிரண் பேடியை மீண்டும் காவல் ஆணையர் ஆக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், போலீசாருக்கு புதுச்சேரி மாநில கவர்னரும், முன்னாள் டெல்லி காவல்துறை அதிகாரியுமான கிரண்பேடி  பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மூத்த காவல்அதிகாரிகள், காவலர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்

கடந்த 2ந்தேதி டெல்லி நீதிமன்றத்தில் காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி, காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று முன்தினம், நடத்திய நிலையில், நேற்று காவல்துறையினர் சீருடையுடன்  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்.

கிரண் பேடியை மீண்டும்  டெல்லி காவல் ஆணையராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் டெல்லியில் போராடும் காவல்துறையினர் பதாகைகள் ஏந்தியவாறு முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில்  காவல்துறை யினரின் குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். காலை தொடங்கிய போராட்டம் நேரம் ஆக ஆக தீவிரமடைந்தது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

‘காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் திடீரென போலீஸார் போராட்டத்தில் குதித்ததால் டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது.

காவல்துறை உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் காவல்துறையினர் போராட்டம் முடிவு பெறாத நிலையில், மத்திய உள்துறை மற்றும் மாநில காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், டெல்லி காவல்துறை  போராட்டத்திற்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் உள்பட பல மாநில காவல்துறையினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில கவர்னரும் முன்னாள் டெல்லி மாநில காவல்துறை அதிகாரியுமான கிரண்பேடி காவல்துறையினருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

காவல்துறையில் உள்ள ஆண் காவல்ர்களும், பெண் காவலர்களும்  தங்கள் கடமையை நியாயமாக, உறுதியாக, அச்சமின்றி, பொறுப்புடன் செய்யும்போது, ​​அவர்கள் தங்கள் மூத்தவர்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி காவலர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.