சென்னை: தமிழ்நாடு மதுபானங்களை பாட்டில்களில் விற்பனை செய்யும்போது,  ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் வழங்குவதற்கு மாற்றாகக் கண்ணாடி பாட்டில்களில் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம்  ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருக்கிறது. சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்தான் என்றாலும், அதன் மாற்று குறித்த நடைமுறை சாத்தியங்களை ஆராய வேண்டியது அவசியமாக இருக்கிறது என்றும் கூறியிருந்தது.

ஆனால், இதை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரச,  தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி முறையீடு செய்தது. இந்த  வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா  அமர்வில் விசாரணையில் உள்ளது.  ஏற்கனவே இந்த  வழக்கில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “உணவு பாதுகாப்பு விதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிக்கிறது. ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறது. குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும்,  பயன்படுத்திய பால் பாக்கெட்டுகளைக் கழுவி மீண்டும் ஆவின் அங்காடியிலேயே ஒப்படைத்தால் பாக்கெட் ஒன்றுக்கு 10 பைசா வழங்கப்படும் என ஆவின் அறிவித்திருந்தது. அது தற்போது நடைமுறையில் இருந்தாலும் மக்கள் பெரிய அளவில் அதைச் செயல்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்,  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் தரப்பில்‘ ஆஜரான அரசு வழக்கறிஞர்,  “பால் விநியோகத்துக்காக பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை” எனக் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  தமிழ்நாட்டில், “மதுவையே பாட்டிலில் விற்கும் போது, பாலை பாட்டிலில் விற்க முடியாதா? என கேள்வி எழுப்பியதுடன்,  போதையில் இருப்பவர்களே பாட்டிலை கவனமாக கையாளும் போது சுயநினைவுடன் இருக்கும் மக்கள், பாட்டிலை கையாள மாட்டார்களா? எனக் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து,  ஆவின் பாலை பாட்டில் மூலம் விற்பனை செய்வது தொடர்பாக, மீண்டும் ஆலோசனை நடத்தி புதிய அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 40 லட்சம் பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் நிலையில் அவையனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளாக மாறுகின்றன. இச்சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சுற்றுச்சூழலை பேணும் வகையில், தமிழ்நாடு அரசு கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என சூழியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுமார் 25ஆண்டுகளுக்கு முன்புவரை ஆவின் பால், கண்ணாடி பாட்டில்களியே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.