சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பாள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறை களுடன் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க நாட்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதையடுத்து, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து அரசும், பள்ளிக்கல்வித்துறையும் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இன்றும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள், நோய் தொற்றால் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்த சாத்தியக் கூறுகளையும் அவர் கேட்டறிந்து, அதனை அறிக்கையாக தமிழ்நாடு அரசிடம் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வழங்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து நேரடி வகுப்புகளை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தொடங்குவது குறித்த முடிவுகளை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே சில மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில், பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அதிகாரிகளோ, அரசோ அறிவிக்காத நிலையில், அக்டோபர் 1ந்தேதி முதல் 1வது முதல் 8ம் வகுப்புவரையிலான பள்ளிகளை திறக்க அரசு, முடிவு செய்துள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் கசிந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.