சென்னை,

மிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் இன்று முடிவு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நேற்று முன்தினம் வரை தமிழக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்த தமிழக அரசும், அமைச்சர்களும் தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும், தமிழகத்தை மத்திய அரசுடன் சேர்ந்து வஞ்சித்து விட்டதாகவும் தமிழக மாணவ மாணவிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவம் படிக்க அகில இந்திய அளவில் நடைபெறும், நீட் தேர்வு முடிவு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து நீட் தேர்வும் நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், சமச்சீர் கல்வி முறை என்பதால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத சிரமப்பட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெற முடியவில்லை.

இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. ஆனால், மத்திய அரசு அதை கிடப்பில் போட்டுவிட்டது. பின்னர் கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 85 சதவிகித உள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.

ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதுகுறித்து அரசு  உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதி மன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நீட் தேர்வில் இருந்த தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று தமிழக மக்களை குழப்பியும், ஏமாற்றியும் வந்த தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் போன்றோர் தமிழக மக்களை வஞ்சித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி இன்று முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் முதல்வர் முன்னிலையில் இன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாத நிலையில், தமிழக மக்களை அரசு வஞ்சித்து விட்டதாகவும், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நிர்மூலமாக்கி விட்டதாகவும் மாணவ மாணவிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.