சென்னை,

திமுகவின் இரு அணிகளுக்கிடையே மோடி அரசும், பிரதமரும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக வும், தமிழக அரசு கோமாவில் கிடப்பதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பல துண்டுகளாக சிதறி உள்ளது. இதில் முக்கியமான இரண்டு பிரிவுகளான ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகளுக்கு பின்புலமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில்  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசு மத்திய அரசிடம் அஞ்சி நடுங்குகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி மற்றும் எடப்பாடி அணிகளுக்கு இடையே மத்திய அரசும், மோடியும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா போன்றோர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர் என்றார்.

தமிழக அரசுக்கு தமிழர்களின் நலனில் அக்கறை இல்லை என்றும், தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றிருக்க முடியும் என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசு செயல்படவே இல்லை என்றும், அதிமுக பிளவு பட்டுள்ளதால் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.   தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்றும்,  தமிழக அரசு கோமாவில் கிடக்கிறது. என்றார்.

ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பா.ஜ.க. குழப்பத்தை ஏற்படுத்துகிறது  என்றும் குற்றம் சாட்டினார்.