கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இரு தினங்களுக்கு முன் பெய்த அதிகனமழை காரணமாக பெங்களூரில் மட்டும் 131 செ.மீ. மழை பதிவானது.

கொட்டித்தீர்த்த கனமழையால் பெங்களூரு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

பெங்களூரை இந்தியாவின் ஐ.டி. தலைநகராக மாற்றிய ஓயிட் பீல்ட் பெங்களூரு நகரில் இருந்து துண்டிக்கப்பட்டு தனி தீவாக மாறியது.

ஒயிட் பீல்டை ஒட்டிய நாகசந்திரா, பெலந்தூர், ஏமலூர், வர்தூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உடைப்பெடுத்து ஓடியதால் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் குளம் போல் மாறின.

10 நிமிட டெலிவரி செயலிகளை உருவாக்கிய மென்பொறியாளர்கள் பலரும் மழையால் மோசமான சாலைகளில் கடந்த சில நாட்களாக பணி்க்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து ஒரு வாரத்தில் 225 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகா மாநிலத்துக்கு பெருமை சேர்த்து வந்த ஐ.டி. துறை தற்போதைய பெங்களூரு ரெயின்ஸ் காரணமாக கிளவுடில் வேலை செய்ய மாற்று இடங்களை தேடவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பகல் சிறிது ஓய்வெடுத்த மழையால் ஐடி நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் ஏறி ஐடி பார்க்குகளுக்கு சென்றனர்.

 

அதேவேளையில் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி எம்பி-யான பாஜக-வைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா தனது தொகுதிக்கு உட்பட்ட பத்மநாபநகரில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை நன்றாக இருப்பதாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவை பார்த்துவிட்டு அந்த உணவகத்திற்கு சென்று தோசையை ருசித்ததோடு தன் பங்கிற்கு ரிவ்யூ போட்டு அந்த உணவகத்திற்கு விளம்பரம் செய்தார்.

அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து மக்கள் மழையில் நொந்து நூடுல்சாக இருக்கும் நிலையில் மக்களவை உறுப்பினர் இப்படி பொருப்பில்லாமல் விளம்பரம் செய்தது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.