சென்னை:

மிழக அமைச்சர் ஜெயக்குமாரை அவதூறு செய்யும் விதமாக வாட்ஸ்அப்பில் படம் ஒன்றை அனுப்பியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சென்னையை அடுத்த பெரும்புதூர் சோமங்கலத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன் (27). ரமேஷ் (39).  அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர். இவரது தம்பி செந்தில்குமார் (33). குணசேகரன், வாட்ஸ்அப்பில் “சோமங்கலம் குரூப் என்ற பெயரில் ஒரு குழு  உருவாக்கி செயல்படுத்தி வந்தார். இதில், மேற்கண்ட மூவரும் அட்மினாக உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், நடிகை ஒருவருடன் இருப்பதுபோன்ற படம் வாட்ஸ்அப்பில் பரவி வந்தது. இந்த படத்தை குணசேகரன், தனது சோமங்கலம் குரூப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபடத்தை ரமேஷ், செந்தில்குமார்  ஆகியோர் வெவ்வேறு வாட்ஸ்அப்  குழுவுக்கும் அனுப்பியுள்ளனர்.

தவிர, அதே படத்தை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அனுப்பி, இந்த படம் உண்மையா என்று இவர்கள் கேட்டதாகவும்  கூறப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில், குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம், கருணீகர் தெருவை சேர்ந்த சிங்காரவேலன் (38) என்பவர்,  சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அசோகன், வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

இந்த நிலையில் மூவரையும் காவல்துறையினர் கைது  செய்தனர். அதில், ரமேஷின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள்  உள்பட பல முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் இருபப்து தெரியவந்தது.  இதையடுத்து காவல்துறையினர் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

இதுகுறித்து மேற்கண்ட மூவரது உறவினர்கள், “கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்.  ஓபிஎஸ்  செயல்பாடுகளை  வாட்ஸ்அப் மூலம், பொதுமக்களுக்கு பரப்பி வந்தார்.   இதனால், எதிர் அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், தவறே செய்யாத மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.  குறிப்பிட்ட அந்த படம், கடந்த எட்டு மாதங்களுக்கு  மேலாகவே பரவி வருகிறது. ஆனால் இப்போது இந்த மூவரை கைது செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.