சென்னை:

மிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,  மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதித்ததாக கூறினார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,  “மத்திய அரசிடம் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது என்று கூறியவர், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றார்,

மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.

மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் , ஊரடங்கு கடுமையாக்குவது,  உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் வீரியமாகிக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமலே கொரோனா வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாங்களாகவே வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 30 நிமிடங்களில் பரிசோதனை செய்துவிடலாம்.

கொரோனா அதிகமாக பரவி வருவதால் தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ளது

கொரோனா சிகிச்சைக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்த்து மொத்தம் 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன

அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே நிவாரண நிதியான 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு தேடிச்சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்குவது கடினமானது.

சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகள் திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 94 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு மற்றும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 72 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித்தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.