சென்னை:

காவிரி விவகாரத்தில் தமிழகம்  தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக கூறினார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதி மன்றம் மீண்டும் மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் மீண்டும் விவசாயிகளிடையே கொந்தளிப்பான சூழல் உருவாகி உள்ளது. தமிழக அரசியல் கட்சியினரும், மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய உச்சநீதி மன்ற விவாதம் குறித்து, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நீதிமன்றம் என்பது அரசியல், தேர்தல் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு காவிரி விவகாரத்தில் துணை போகிறது. இந்த விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கொடுப்பது தமிழக விவசாயிகளை முழுமையாக அழித்து ஒழிக்கும் செயல். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது.

உச்சநீதிமன்றத்தின் மீது தான் பெருமதிப்பு கொண்டிருந்ததாகவும், ஆனால் சமீப காலமாக  அங்கிருந்து வரும் செய்திகள் அதன் மாண்பை குலைத்துவிட்டது. இன்றைய தீர்ப்பு  நீதித்துறைக்கு தலைகுனிவு என்று கூறினார்.

மத்திய அரசின் தமிழக விரோத போக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக அரசு, இதில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

தமிழகத்தில் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்க அதைப்பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.