இயக்குநர் ஹரியின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம்?

Must read

சாத்தான்குளத்தல் தந்தை-மகன் இருவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள் அவர்களுள் முக்கியமானவர்கள்!

காவல்துறை சார்ந்த படங்களை எடுப்பதில் பெயர்பெற்ற இயக்குநர் ஹரி, சாத்தான்குளம் சம்பவம் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்து பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

சூர்யாவை வைத்து ‘சிங்கம்’ என்ற பெயரில் 3 பாகங்கள், விக்ரமை வைத்து ‘சாமி’ என்ற பெயரில் 2 பாகங்கள் என்று காவல்துறை சார்ந்த படங்களால் புகழ்பெற்றவர் இயக்குநர் ஹரி.

அவர் தனது கருத்தின் கடைசியில், காவல்துறையைப் பெருமைப்படுத்தி படங்களை எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்றுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை பார்த்த பலர், ‘அப்பாடா, நிம்மதி!’ என்று சொன்னது ஒருபுறம் இருக்கட்டும். அது அவர்களின் ரசனை சார்ந்தப் பிரச்சினை!

ஆனால், அதிகாரமும், செல்வாக்கும், பணமுமற்ற அப்பாவி மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறை எப்போதும் பலகாலமாக தொடர்ந்து இருந்து வருவதுதான்! லாக்-அப் விசாரணை மரணங்கள் குறித்து ஒவ்வொரு காலகட்டங்களிலும் தொடர்ச்சியாகப் புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட குற்றவாளிகளின் தேடுதல் வேட்டை ஆபரேஷன் நடவடிக்கைகளில், காவல்துறையினர் மேற்கொள்ளும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பல புத்தகங்களே வெளிவந்துள்ளன. தமிழகத்தின் வீரப்பன் தேடுதல் வேட்டையை இதற்கான சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

சமூகவலைதளங்கள் இல்லாத காலங்களில், பல அடக்குமுறைகள் வெளியில் தெரிவது கடினமாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நிலைமையே வேறு!

லாக்-அப் மரண நிகழ்வுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் உள்ளன. திருச்சியில் கணவனுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு கர்ப்பிணி பெண் சென்றபோது, போக்குவரத்து காவலரால் எட்டி உதைக்கப்பட்டு, கீழே விழுந்து மரணித்த சம்பவமாகட்டும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியப் பெண்கள் கையாளப்பட்டதாகட்டும், ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஒருவர் மிக மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாக இருக்கட்டும், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, கிழக்கு தாம்பரம் பகுதியில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் மிக மிக கொடூரமாக தாக்கியதாகட்டும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மிகக் கொடூரமாக ஒடுக்கியதாகட்டும், தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேரை கொலைசெய்து தாண்டவமாடியதாக இருக்கட்டும், ஹரி, சினிமா இயக்குநராக புகழ்பெற்று விளங்கிய காலத்தில், காவல்துறை சார்ந்த எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழக அளவிலேயே உதாரணங்கள் குவிந்து கிடக்கையில், இந்திய அளவிற்கெல்லாம் செல்லத் தேவையில்லை. தனிப்பட்ட பகை மற்றும் விமர்சனங்களை மனதில் வைத்து, காவல்துறையினர் பலரை பழிவாங்கும் சம்பவங்களும் நிறைய!

இயக்குநர் ஹரிக்கு விபரம் தெரிந்த காலம் முதல், நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க வகையில் நடைபெற்ற சம்பவங்களும் பல. ஜல்லிக்கட்டு போராட்ட போலீஸ் ஒடுக்குமுறை நடந்த சில நாட்களில் ஹரியின் ‘சிங்கம் 3’ படம் வெளியானது!

அப்போதெல்லாம் ஏன் இந்த உணர்வு அவருக்கு வரவில்லை? ஆனால், திடீரென சாத்தான்குளம் சம்பவத்தில் மட்டும் திடீரென அவரின் உணர்வு தெளிவதற்கான காரணம்?

இந்த இடத்தில்தான் சினிமா பிரபலங்களின் ஜாதிப் பிரியம் குறித்த நெருடல் நமக்கு ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் ஜாதிய உணர்வு என்பது மிகப் பிரபலம். பலபேர் மிக வெளிப்படையாக தங்களின் ஜாதிய அடையாளத்தை சுமந்து திரிகிறவர்கள். தங்களுடையப் படங்களில் குமட்டும் அளவிற்கு ஜாதிய நெடியைப் படர விடுபவர்கள்!

அந்தளவிற்கு இல்லையென்றாலும், இயக்குநர் ஹரியின் மீதும், அவரது பல படங்கள் காரணமாக ஜாதி உணர்வு முத்திரை உண்டு. சிறுவயதில் காவல்துறையில் சேர விரும்பியதாகவும், அது கைக்கூடாமல் போகவே தன் படங்களின் மூலம் தனது ஆசையை அவர் தீர்த்துக்கொள்கிறார் என்றும் கூறப்பட்டதுண்டு!

பொதுவாகவே, ஒரு அமைப்பைப் பற்றியும், அது யாரின் வர்க்க நலனுக்காக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்பது பற்றியதுமான புரிதல் நமது சமூகத்தில் மிகவும் குறைவு. ஒரு நல்ல அமைப்பில், சிலர் செய்யும் தவறுகளால்தான் இப்படி! என்பதான சப்பைக்கட்டுகள்தான் இங்கு பிரபலம் மற்றும் அதிகம்!

பொதுவாகவே, அரசமைப்பில், குறிப்பிட்ட வர்க்கங்களின் நலன்களுக்காக உருவாக்கி பராமரிக்கப்படும் காவல் படைகள், சாதாரண வெகுமக்களுக்கு எதிரானவையாகத்தான் இருக்கும். இதுதான் அடிப்படை அரசியல் சித்தாந்தம்!

இந்த சித்தாந்தமெல்லாம் எத்தனை வணிகரீதியான படைப்பாளிகளுக்குத் தெரியும்? அல்லது எத்தனை பேர் இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவர்கள்? என்பதுதான் இங்கு கேள்விகளே..!

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இயக்குநர் ஹரி என்பவர் ஒரு மாசாலா(வணிக) சினிமா இயக்குநர்தான். அவரிடமிருந்து நாம் இந்தமாதிரி அறிக்கைகளையெல்லாம் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், எவ்வளவோ கொடூர சம்பவங்கள் நிகழ்ந்தபோது அப்போதெல்லாம் கிளரப்படாத அவரின் உணர்வு, சாத்தான்குளம் கொடுமையின்போது மட்டும் மேலெழுகிறது என்றால், அதற்கு காரணம் ஜாதியாக இருக்குமோ! என்ற சந்தேகம் நமக்கெல்லாம் எழுவது இயல்பான ஒன்றுதானே?

எது எப்படியிருந்தாலும் சரி, இந்த சம்பவத்திற்குப் பிறகாவது, ஹரி உள்ளிட்ட சினிமாவின் பல இயக்குநர்கள், அரசு அமைப்புகள் குறித்து, தேவையற்ற மற்றும் போலியான கற்பிதங்களை தம் படங்களில் முன்வைக்காமல் இருந்தால், அது வரவேற்கத்தக்கது..! இது நடிகர்களுக்கும் சேர்த்தே…

 

– மதுரை மாயாண்டி

More articles

Latest article