சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அரசுக்கு என்ன சிக்கல்?  என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது  என கருத்து தெரிவித்து உள்ளது. மேலும் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.

6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழ்நாடு அரசு, தொமுக, சிஐடியு மற்றும் தனியார் ஓட்டுநர்களைக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதற்கிடையில்,  போக்குவரத்து கழக வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியசென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் P.R.ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். வழக்கின் மனுவை அரசு தரப்பிற்கும், போக்குவரத்து கழகங்கள் மற்றும் சம்பந்தபட்ட தொழிற்சங்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதுபோல,   வேலைநிறுத்தம் செய்வதற்கு சட்டப்பூர்வ அல்லது சட்டரீதியான உரிமை இல்லை என்பதால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததிற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது,  பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்  என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை என்றும், இந்த விவகாரத்தில், அரசும், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்? தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.

பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு  வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதிகள் அமர்வு,  இந்த  போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்  என்றும்,  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா என அரசிடம் கேட்டு சொல்லுமாறு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.