இந்தியாவிலேயே, எங்குமில்லாத வகையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அவமானங்களை சந்திப்பது பிரதமர் மோடியின் வழக்கம்தான்! அது அவருக்கும் பழகிவிட்டது என்று நினைக்கும் வகையில்தான் அவரும் நடந்துகொள்கிறார்.
ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி, அவர் சந்தித்த ஒரு புதுவிதமான அவமானம் வேறு லெவல்!
திமுகவின் பல வேட்பாளர்கள், நீங்கள் எனது தொகுதியில் வந்து, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், எனது வெற்றி வித்தியாசத்தை இன்னும் அதிகரித்து கொள்ள, பெரிய உதவியாக இருக்கும் என்று டிவீட் போடும் அளவிற்கு நிலைமை சென்றது.
உண்மையில், இதுவெல்லாம் வேறு லெவல் கலாய்ப்புதான்! ஆனால், இதையும் மோடி கடந்து சென்றுகொண்டுள்ளார்.
இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை நிலவுவதற்கு, பெரியாரிய-அம்பேத்கரிய பிரச்சார அரசியல் மிக முக்கிய காரணம் என்பதை குறைந்தபட்ச நியாயம் உள்ளவர்கள் எவரும் மறுத்துவிட முடியாது.
இதைத்தான் சில இடதுசாரி சார்பு இயக்கங்களும் உரிமை கொண்டாடுகின்றன. திராவிடர் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தன்னாட்சி தமிழகம், மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், தாங்கள், இந்த தமிழ் சமூகத்தில், மோடி எதிர்ப்பை பெரியளவில், தொடர்ச்சியாய் முன்னெடுத்துச் செல்வதாய் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் சொல்வதை நாமும் நிச்சயம் மறுக்க முடியாது. ஏனெனில், பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரிய சித்தாந்த அடிப்படையில் இயங்கும் இத்தகைய அமைப்புகளுக்கு, மோடி மற்றும் பாஜக எதிர்ப்பைவிட, பிரதானப் பணி என்று எதுவும் இருக்க முடியாதுதான்.
அந்தவகையில், தமிழ்நாட்டில், நரேந்திர மோடி எதிர்கொள்ளும் விதவிதமான அவமானங்களுக்கு, தேர்தல் அரசியல் கட்சிகளைவிட, இத்தகைய இயக்கங்களே முக்கிய காரணம் என்று சொன்னால், அதில் பெரிய பிழை எதுவும் இருக்கப்போவதில்லை..!
இந்த இயக்கங்களின் உழைப்பை, பெரிய அரசியல் கட்சிகள் அறுவடை செய்து கொள்கின்றன.
ஏனெனில், தமிழ்நாட்டிற்கு மோடி எதுவும் செய்யாத காரணத்தால்தான் அவர்மீது இத்தனை வெறுப்புணர்வு என்று யாரேனும் சொன்னால், மோடி, எந்த மாநிலத்திற்கு எந்த நன்மையை செய்தார்? என்ற எதிர்கேள்வியை எளிதாக கேட்கலாம்.