சென்னை: திமுகவின் வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், வாரிசு அரசியல் என்றால் என்ன தெரியுமா? அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வாரிசு அரசியல் என்பது “இருப்பதை இழப்பவன் – தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 4முனை போட்டி நிலவி வரும் நிலையில், இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் கால்பதிக்க எண்ணி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அப்போது திமுகவின் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவின் வாரிசு அரசியலை தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதியே ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்தவர்கள்தான் நாடாளுமன்றம் போக வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஆளுங்க சட்டசபைக்கு வரலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு போக முடியாது என்று கூறினார். (துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் இந்தி தெரிந்தவர் மட்டுமின்றி, சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது)
“இந்த தேர்தல் வெற்றி பெறுவதற்கான தேர்தல் மட்டுமல்ல. ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தல். நான் வந்தால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் என மோடி சொல்கிறார். ஹிட்லர் போல மோடி செயல்படுகிறார். இதை அனைத்தையும் நாம் எதிர்ப்பதால் மோடிக்கு கோபம் வருகிறது. ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் நபர்கள் நண்பர்களாக இருந்தாலும் எதிர்ப்போம்.
வாரிசு அரசியலை ஒழிப்பேன் என பிரதமர் பேசி உள்ளார். வாரிசு அரசியல் என்றால் என்ன? ஆணாக இருப்பவன் திருமணம் செய்து கொள்கிறான். மிகுந்த ஆணாக இருப்பவன் குழந்தை பெற்று கொள்கிறான். இதற்கு மேல் இதைப்பற்றி பேச விருப்பமில்லை. கட்சி முக்கியம் கொள்கை முக்கியம் என உள்ளவர்கள் தான் திமுகவினர். வாரிசு அரசியல் என்பது “இருப்பதை இழப்பவன் – தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை”. (அமைச்சர் துரைமுருகனும், தனது மகன் கதிர்ஆனந்தை எம்.பி.யாக்கி அழகு பார்த்தவர், தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உதயநிதி, கதிர் ஆனந்த், அருண்நேரு போன்றவர்கள் என்ன தியாகம் செய்தவர் என்பதுதான் புரியவில்லை)
திமுகவை தேய்த்து அழித்து விடுவேன் என்கிறார் மோடி; சாவுக்கு அஞ்சாத படை திமுக. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன தெரியுமா? புல் முளைத்திருக்கும் இன்று. திமுகவை அழிக்க முடியாது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்தியமாக நாட்டில் ஜனநாயகம் இருக்காது”.
இவ்வாறு பேசினார்.
வாரிசு அரசியல் என்பது என்ன தெரியுமா? மதுரை தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்…