புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தான் நிகழ்த்திய திருப்பங்கள், ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மெக்ராத்திடமிருந்து கற்றுக்கொண்டவைதான் என்றுள்ளார் இந்திய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா.

கடந்த 2017ம் ஆண்டு, சென்னையின் எம்ஆர்ஃஎப் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சி பள்ளியில், கிளென் மெக்ராத்திடம் பயிற்சி பெற்றவர்தான் இந்த பிரசித்.

இந்திய அணியில் முதன்முதலில் பிரசித் வாய்ப்பு பெற்றது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மெக்ராத்.

இந்நிலையில், அந்த வாழ்த்துக்களுக்கு பதிலளித்துள்ள பிரசித், “களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, லைன் அன்ட் லென்த்தில் எப்போதுமே கவனம் செலுத்தி, அதை தவறவிடாமல், ஒவ்வொரு ஆடுகளத்திற்கும் ஏற்றவாறு பந்துவீசுவதில் மெக்ராத் வல்லவர். அவர் எப்போதும் நிலைத்தன்மை குறித்து வலியுறுத்துவார்.

ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும்போது, அந்த சூழலில் நாம் இருந்து, தேவையானதை செய்ய வேண்டுமென்பது நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். இது ஆட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் தேவையான ஒரு பாடம்” என்றுள்ளார் பிரசித் கிருஷ்ணா.