சென்னை:  சென்னை  புத்தகக் காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது சென்னை  புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.  இந்த புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு, அதற்கான விளம்பர போர்டுகளும் வைக்கப்பட்டுள்ள  நிலையில் , தற்போது திடீரென முதலமைச்சருக்கு பதிலாக, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு  தொடங்கி வைப்பதார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் அங்கு நடைபெறும் த்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி  உதயநிதி உரை  ஆற்றுவார் என்றும், அவருடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் கலந்துகொள்ள வேண்டிய பல நிகழ்வுகள் அவ்வப்போது உதயநிதிக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில், இன்று புத்தக காட்சி திறப்பு விழாவிலும் முதலமைச்சருக்கு பதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொள்வது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பா? அல்லது மகன் உதயநிதியை துணைமுதல்வராக்கும் முயற்சியா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.