சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையினர்,அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை யினர் கைது செய்தனர். அப்போதே நெஞ்சில் வலி ஏற்பட்டதாக கூறி காரில் சரிந்த செந்தில் பாலாஜி, உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக காவேபரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இருதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தாலும் அவ்வப்போது, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த புதன் கிழமை (நவம்பர் 15ந்தேதி) தலைசுற்றல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சோதனை நடத்தி, அவரை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிறைக்கு செல்லாமல், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்நோயாளியாக அட்மிட் செய்யப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பித்தப்பையில் கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், நாள்தோறும் 11 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் செந்தில்பாலாஜி, அதற்கு ஏற்ப உணவு உட்கொள்ளாதது, தீவிர மன அழுத்ததிற்கு தள்ளியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரின் உடல் எடை சுமார் 8 கிலோ குறைந்ததையும், ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதையும் மருத்துவக்குழு உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அவருக்கு பக்கவாதம் (ஸ்டோர்க்) வர வாய்ப்பு உள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கனையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும், செந்தில் பாலாஜிக்கு சரிவர தூக்கம் இல்லாத பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளன. கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி, பிரச்சனைகளும் உள்ளதால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனையத்தில் உள்ள கொழுப்பு கட்டியை கரைக்க மருந்து-மாத்திரைகள் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் அதன் முடிவுகளை வைத்து அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை விவரங்கள் நாளை வெளியிடப்படும் என கூறினார்.