சென்னை: நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால், அதை அகற்றும் பணியில் அதிகாரிகளும் ஊழியர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலவுவதால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று இரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை. திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசனது முதல்  கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து வருகிறது.  மாதவரம், பெரம்பூர், கோயம்பேடு, ரெட்ஹில்ஸ், வடபழனி,  திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, பாரிமுனை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், அடையாறு, கோடம்பாக்கம், ஆலந்தூர் , கிண்டி, தாம்பரம் என  சென்னையின் பல்வேறு இடங்களில் இரவுமுதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.  சாலைகளில் தங்கும் தண்ணீரை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இருந்தாலும், பட்டாளம் அனுமன் கோவில் பகுதி உள்பட சில இடங்களில் மழைநீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் கடும் துயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில்,  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 22ந்தேதி முதல் 25ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.