ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று நேரில் சந்தித்தது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
டில்லிலி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ஆளுநரை நேற்று மாலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.
ஸ்டெர்லைட் மற்றும் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மத்திய அரசின் மூலம் மாநில அரசுக்கு வழிகாட்டுதல் எதுவும் தரப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆகவே, ஆளுநர் – முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் ஆளுநருடனான 30 நிமிட சந்திப்பு குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், ”காவிரி நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், மேலும் பல்வேறு போராட்டங்கள் குறித்தும் ஆளுநர் எங்களிடம் விளக்கம் கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் திருப்தியடையும் அளவுக்கு அளித்துள்ளோம்.
தமிழகத்தில் கோடையில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினை குறித்து கேட்டார். அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தோம். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் கவனமாக கேட்டு திருப்தி தெரிவித்தார்” என்றார்