சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும், “நடரான் தமிழ்ப்பற்று மிக்கவர். ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க முனைந்து பாடுபட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்” என்று பேசினார்கள்.

இதைத்தவிர குறிப்பாக சிலர் பேசியதில் இருந்து…

 

பழ. நெடுமாறன்:

சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால், எல்லோரிடமும் நடராஜன் நட்பு பாராட்டி வந்தார். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாத, மற்றவர்கள் பதவிகளில் ஏறி அமர்வதற்கு ஏணியாக இருந்தார்.  தன்னுடைய கடமையை செய்யும் கர்ம வீரராக வாழ்ந்து மறைந்துள்ளார் நடராஜன்.

நல்லகண்ணு:

உலக நாடுகள் தமிழர்களையும், நம் நாடு பற்றியும் சிந்திக்க வைக்க இவர் அறிஞராக வாழ்ந்தார்.

கி.வீரமணி:

 மனிதன் தானாகவும் பிறக்கவில்லை தனக்காகவும் பிறக்கவில்லை என்ற பெரியாரின் சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்துகாட்டியவர், நடராஜன் மறையவில்லை நம்மோடு உறைந்துவிட்டார். நடராஜனை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது இயற்கையின் கோணல்புத்தி என்றுதான் சொல்ல வேண்டும். 

தா.பாண்டியன்:

உலகம் சுற்றும் வாலிபர் நடராஜன்

திருமாவளவன்:

நடராஜனும், சசிகலா அம்மையார் அவர்களும் தங்கள் இல்லற வாழ்க்கையை நடத்தியதே இல்லை என்பது பெரும் சோகம். அண்மையில் நடராஜன் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது தன்னைச் சந்தித்த நலம் விரும்பிகளிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘அம்மாவும் இப்போது இல்லை. இனிமேலாவது சசியை போயஸ் கார்டனில் இருந்து கூட்டி வந்து நானும் சசியும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்’ என்று சொன்னார் நடராஜன். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.

சீமான்:

தகப்பன் ஐயா நடராஜன். எனக்கும் என் மனைவிக்கும் தன் கையாலேயே உணவு பரிமாறிய தாய் ஐயா நடராஜன்.

வைரமுத்து:

போர் குணத்தின் உச்சத்திலும் கூட பண்பாடு காத்தவர் அண்ணன் நடராஜன்