சென்னை: 

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத  மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில்  தமிழக அரசின் முக்கிய  அதிகாரிகள் நேற்றிரவு திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில்,   காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

இந்நிலையில்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசு, வரும் 3ந்தேதி அதிமுக சார்பில்  தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி பிரச்சினை குறித்து மீண்டும் உச்சநீதி மன்றம் செல்ல இருப்பதாகவும், ஆனால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் மத்தியஅரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஏற்கனவே காவிரி பிரச்சினையில் தமிழக அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றது.

இதற்கிடையில், தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் நேற்றிரவு திடீரென புறப்பட்டு டில்லி சென்றனர்.

இதன் காரணமாக,   தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்படும் என்றும்,  இந்த வழக்கை  அவசர வழக்காக எடுத்துக்கொள்ள உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.