பிப் 6 ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த பேரழிவில் இருந்து மக்களை மீட்க முதல் ஆளாக களமிறங்கியது இந்தியா.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் 152 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவை தயார்படுத்தியதுடன் அவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட், உணவுப் பொருட்கள், தங்குவதற்கான தற்காலிக டென்டுகள், மருந்து பொருட்கள், கடும் குளிரை தாங்கக்கூடிய உடைகள் என்று சகலத்தையும் பல்வேறு துறைகளிடம் இருந்து ஒருங்கிணைத்து பெற்று உடனடியாக பிப் 7 ம் தேதி துருக்கி சென்றது இந்திய மீட்புக் குழு.

முதல்முறையாக வெளிநாட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஐந்து பெண்கள் உள்ளிட்ட 140 பேருக்கான பாஸ்போர்ட் தயாரிக்க தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் அவர்களுக்கான டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை உடனடியாக வழங்கியது.

3 என்.டி.ஆர்.எப். குழுவைச் சேர்ந்த 152 பேருடன் 6 மோப்ப நாய்களும் சென்றது 10 நாட்கள் மீட்பு பணி முடித்து பிப் 17 ம் தேதி இந்தியா வந்திறங்கிய மீட்புக் குழுவினரை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து கௌரவித்தார்.

துருக்கி சென்று இறங்கிய இந்த குழுவுக்கு வருகையின் போது விசா வழங்கிய அந்நாட்டு அரசு இவர்களை காஜியாந்தேப் மாகாணத்தின் நுர்த்துகி பகுதிக்கு மீட்புப் பணிக்காக அனுப்பி வைத்தது.

6 மணி நேரத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையை அமைத்த இந்தக் குழு சுமார் 3600 பேருக்கு மருத்துவம் பார்த்துள்ளது. தவிர 2 சிறுமிகளை உயிருடன் மீட்ட மீட்புக் குழு 85 பிணங்களை மீட்டெடுத்தது.

மைனஸ் 5 டிகிரி வெப்பநிலையில் 10 நாட்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கி மீட்பு பணிகளை மேற்கொண்ட இந்தக் குழு இயற்கை உபாதைகளுக்கு குழிகள் அமைத்து தங்கள் காலைக் கடனை நிறைவேற்றிய இவர்கள் பத்து நாட்களும் குளிப்பதற்கு கூட வசதியில்லாமல் துண்டைக் கொண்டு தண்ணீரால் துடைத்துக் கொண்டதாகக் கூறினர்.

துணை மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த காவலர் சுஷ்மா யாதவ் இந்த மீட்பு பணிக்காக தனது ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளை தனது மாமியாரிடம் விட்டுச் சென்றுள்ளார்.

இது தான் அவர் முதல்முறையாக குழந்தைகளை நீண்ட நாட்கள் பிரிந்திருந்ததாகக் கண்ணீருடன் கூறியிருந்தார்.

“தன்னை வெளிநாட்டுக்கு மீட்பு பணிக்காக அனுப்பி வைப்பதில் எனது பெற்றோருக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்ற போதும் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிர்வுகள் குறித்த செய்தியால் நான் எங்கு இருக்கிறேன் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து மிகவும் கவலையடைந்தனர்” என்று மற்றொரு பெண் உதவி ஆய்வாளர் ஷிவானி அகர்வால் தெரிவித்துள்ளார்.

“எங்களது முதன்மை பணி நமது மீட்பு குழு வீரர்களின் உடல்நிலை, அவர்களுக்கான ஆரோகியமான உணவு வழங்குவது மற்றும் அவர்களுக்கான காயங்களுக்கு மருந்து போடுவது என்பதாக இருந்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை நிலநடுக்கத்தில் இழந்த உள்ளூரைச் சேர்ந்த அஹ்மத் என்ற நபர் நான் சைவ உணவு சாப்பிடுவதைப் பார்த்து எனது உணவுப் பழக்கத்தை புரிந்து கொண்டு எனக்காக அங்கு கிடைக்கக் கூடிய ஆப்பிள், தக்காளி உள்ளிட்டவற்றை உப்பு மிளகு போட்டு சாலட் போல் நான் எந்த பகுதியில் பணியில் இருந்தாலும் எனக்காக எடுத்துக் கொண்டு வந்தார்” என்று இணை கமாண்டர் தீபக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்குள்ள மக்கள் இந்திய மீட்புக் குழுவினரை சகோதரர்கள் போல் நடத்தியதுடன் எங்களை ‘பிரதர்’ என்றே அழைத்தனர் ஹிந்துஸ்தானியர்கள் என்றவுடன் தனிமரியாதை அளித்தனர்.

மீட்பு பணிகளை முடித்துக் கொண்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது எங்களிடம் இருந்த கூடாரங்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்களிடம் விட்டு வந்தோம்.

தவிர, என்.டி.ஆர்.எப். இந்தியா மற்றும் என்.டி.ஆர்.எப். சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் ஆகியவற்றை இந்திய மீட்புக் குழுவின் நினைவாக கேட்டுப் பெற்றனர்.

ஷாருக் கான், சல்மான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்த படங்களை பார்ப்பதாக கூறிய துருக்கியர்கள் இந்தியா திரும்பியதும் அவர்களிடம் எங்களது அன்பைக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பியுள்ளனர்.

‘ஆப்பரேஷன் தோஸ்த்’ முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் போது துருக்கி மக்கள் அளித்த அன்பான வழியனுப்பு என்றும் எங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் என்று டெல்லி வந்திறங்கிய மீட்புக் குழு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது.