சென்னை: நாடு முழுவதும், இப்போதே வெயில் அளவு  அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை யடுத்து, மின்தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில்  கோடை காலம் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மற்றும் சூன் மாதம்வரை நீடிக்கும். ஆனால், இந்தியாவில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் நிலை உள்ளது. இந்த காலக்கட்டத்தில்   வெயில் அதிகரிப்பதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை, மக்களின் வாழ்வதாரத்திற்கு ஏற்ப மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது, நாள் ஒன்றுக்கு 200 ஜிகாவாட் மின்சார தேவை உள்ள நிலையில், பிப்ரவரி 20-ந் தேதி, உச்சபட்ச மின்தேவை 205.52 ஜிகாவாட்டாக அதிகரித்தது. அன்றைய தினம் 4 ஆயிரத்து 281 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.  இது கோடைகாலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும், நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட் முதல் 250 ஜிகாவாட் வரை  உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘

இதையடுத்து, கோடை காலத்தின் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், மத்திய மின்துறை அமைச்சகம்  மின்சார தேவை குறித்து மாநிலங்களுக்கு  அறிவுறுத்தி உள்ளதுடன் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி, டாடா பவர், அதானி மின்நிலையங்கள், எஸ்ஸார் மின்உற்பத்தி நிலையம், ஜே.எஸ்.டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உள்பட 15 அனல்மின் நிலையங்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் இயங்கி வரும் நிலையில், அவை தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்சார வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  நாட்டின் கோடைகால மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆகவே, மார்ச் 16-ந் தேதியில் இருந்து ஜூன் 15-ந் தேதிவரை, தங்களது அனல்மின் நிலையங்கள், இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தி, தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.  இதன்மூலம் கோடைகால மின்தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.