கடந்த 4 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவி வகிக்கும் மற்றும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு சிறந்த ஆளுமை என்று சில அரசியல் விமர்சகர்கள் புகழும் வேளையில், வேறுசிலரோ, அவரை அதற்கு எதிர்மாறாக மதிப்பிடுகின்றனர்.
ஆனால், இன்னும் சிலபேர் எடப்பாடி பழனிச்சாமியை சமமான நிலையில் நின்று மதிப்பிட முயல்கிறார்கள்!
அவர்களின் கருத்துக்களின் கோர்வையை இங்கு காண்போம்.
தனக்கு நல்வாய்ப்பாக கிடைத்த முதல்வர் பதவியை, பல்வேறு சமரசங்களை செய்தும், தனது ஜாதிய லாபியை வைத்தும், 4 ஆண்டுகள் தக்கவைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சியை சரிக்கட்டி விட்டார். ஆனால், கட்சி என்று வரும்போது அதிகம் கோட்டைவிட்டு விட்டார்.
மேலும், மாநிலம் தழுவிய அரசியல் வியூகங்கள் என்று வருகையில், அவர் பலவீனமானவராகவே காட்சியளிக்கிறார். உட்கட்சி பூசலை அவரால் தன் கட்டுக்குள் வைத்து சமாளிக்க முடியவில்லை மற்றும் அதில் அவர் பெரிய அக்கறையையும் காட்டவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தை ஆட்சிரீதியாக கட்டுப்படுத்திய அவரால், கட்சிரீதியாக பெரிதாக எதுவும் செய்ய இயலவில்லை.
முக்கியமான சட்டமன்ற தேர்தல் கூட்டணி வியூகத்தில், தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறான தவறுகளை இழைத்துவிட்டார். தான் போட்டியிடும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், பெரும்பான்மை வாக்காளர்கள் வன்னியர்கள் என்ற நிலையில், அதனை மட்டுமே மனதில் வைத்து, தான் வெல்வதற்கு வன்னியர் வாக்குகள் போதும் என்ற மனநிலையில், பாமகவை கூட்டணியில் இணைத்தார். மேலும், வன்னியர்களுக்கென்று 10.5% தனி இடஒதுக்கீட்டை அறிவித்து தனக்கான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே அவர் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.
அதேசமயம், தேமுதிக உள்ளிட்ட வேறுசில கட்சிகளை தேவையில்லாமல் கோட்டைவிட்டு விட்டார். தேமுதிக இன்றைக்கு அதிகம் தேய்ந்து போயிருந்தாலும், வடமாவட்டங்களில், ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 15000 வாக்குகள் வரையிலும் அந்தக் கட்சி பெறலாம் என்பதை எளிதில் மறுத்துவிட முடியாது.
மேலும், அமமுக இணைப்பு விஷயத்திலும், எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருந்துவிட்டார். இதனால், ஏராளமான தொகுதிகளில் அவரின் கட்சி பின்னடைவை சந்திக்கிறது. வன்னியர் உள்ஒதுக்கீடும் பல விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், இவைப் பற்றியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித கவலையும் கொண்டதாக தெரியவில்லை.
இவை அனைத்தையும்விட, அந்த விமர்சகர்கள் குறிப்பிடும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் என்ற கட்சிப் பதவியை பழனிச்சாமி, இன்னும் தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளார் என்பதை ஆச்சர்யத்துடன் குறிப்பிடுகின்றனர்.
மாநில முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுவரை வந்துவிட்ட பழனிச்சாமிக்கு, ஒரு மாவட்ட செயலாளர் பதவி என்பதெல்லாம் விஷயமே இல்லை! ஆனாலும், இதன்மூலமாக அவரின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
ஆக, எடப்பாடி தொகுதியில் தான் ஜெயித்தால் போதுமானது என்றும், கொங்குப் பகுதியில் தன் சாதி சார்ந்த வாக்குகளை வாங்கிவிடலாம் என்றும் அவர் நினைப்பதாகவே முடிவுக்கு வர முடிகிறது. அதற்காகவே பாமகவையும், வேறுவழியின்றி பாஜகவையும் கூட்டணியில் வைத்துக்கொண்டு, தேமுதிக போன்ற கட்சிகளை நழுவவிட்டுள்ளார் என்பதும் நமக்குப் புலனாகிறது.
இந்தவகையில், அதிமுகவை தன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென விரும்பும் எடப்பாடியார், இன்னும் மாவட்டச் செயலாளர் என்ற மனப்பான்மையை தாண்டி வளரவில்லை. இத்தகைய மனப்பான்மை உள்ள ஒருவர், மாநிலம் தழுவிய ஒரு தலைவராக வருவதென்பதெல்லாம் நடக்காத காரியம். அப்படியான திட்டம் பழனிச்சாமியிடமும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக, அவரிடம் குறுகிய கால திட்டமிடலே இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் அவர்கள்.