கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் ஊடகங்கள் மக்களை ஏமாற்றுகிறதா? ஏமாளியாக்குகிறதா?

சிறப்புக்கட்டுரை: ATS Pandian

மிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு சரியாக இன்னும் 10 நாட்களே உள்ளன. அதற்குள், ஆட்சியை கைப்பற்றப்போவது எந்த கட்சி, முதல்வராக பதவி ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஏராளமான கருத்துக்கணிப்புகள் வெளியாகி மக்களை குழப்பி வருகின்றன.

இது ஒருபுறம் அரசியல் களத்தில் விவாதப்பொருளாகி வரும் நிலையில், மற்றொருபுறம், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தினசரி ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களை யும், முக்கிய பிரமுகர்களையும், நேர்காணல் என்ற பெயரில் இழுத்து வந்து, அவர்களிடம் இக்கட்டான கேள்விகளை எழுப்பியும், அவர்கள் நினைக்கும் கருத்துக்களை திணித்தும், அதை அவ்வப்போது ஒளிபரப்பி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

தமிழகத்தைப்பொறுத்தவரை அனைத்து ஊடகங்களும், அதன் முதலாளிகளும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்தே இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள்,  அது நேஷனல் ஹெரால்டாக இருக்கட்டும், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியாகட்டும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இருந்துதான் செயல்படுகின்றன – அவரவர் கட்சி சார்ந்த கருத்துக்களை திணிப்பதிலேயே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.

சரி அது இருக்கட்டும், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம், அந்த கருத்துக்கணிப்புகள் எவ்வாறு பொதுமக்களிடம் திணிக்கப்படுகிறது என்பது குறித்து ஆராய்வோம்….

ற்போதைய சூழலில் தமிழக அரசியல் களத்தில் 5முனை போட்டி நிலவி வருகிறது. அதாவது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் மெகா கூட்டணியும், அதிமுக பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், அமமுக தலைமையில் 3வதாக ஒரு கூட்டணி, கமல்ஹாசன் தலைமையில் 4வதாக ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 அணிகள் களமிறங்கி உள்ளன.

இதை அடிப்படையாக வைத்தே ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்ட கருத்துக்கணிப்புகள் தமிழகஅரசியல் களம் குறித்து வெளியாகி உள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறி வரும் நிலையில், சில அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கும் வெற்றிவாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளன.

1) முதலில் வெளியான  டைம்ஸ் நவ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி அணி 65 இடங்களில் வெற்றி, மக்கள் நீதி மய்யம் கட்சி 5 இடங்களிலும், டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

2) ஜனநாயகத்தின் குரல் மற்றும் மக்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,  தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என 36% மக்கள் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன், அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு 51% ஆதரவு உள்ளது என்றும்,  முக ஸ்டாலினை 34% மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணி 112 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி 80 முதல் 90 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 24 தொகுதிகள் இழுபறி நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

3) புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில், . திமுக கூட்டணி 151-158 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 76-83 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.

4) ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர்  இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி 158 முதல் 166 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும்,  அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவித்தள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 2016 தேர்தலைவிட வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.  மேலும், அதிமுகவின் வாக்குகளை டிடிவி தினகரனின் அமமுக பிரிக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், அமமுகவுக்கு குறைந்த பட்சம் 2 இடங்கள் முதல்  6 இடங்கள் வரை  வெற்றிபெற  வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனமான சிவோட்டர் நிறுவனம்தான், ஏபிபி செய்தி நிறுவனத்துடன் இணைந்தும் களப்பணியாற்றி கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5) தந்தி டிவி கருத்துக்கணிப்பில், சதவிகிதம் என்ற பெயரில் மக்களை குழப்பி இருப்பதுடன், இறுதியாக,  ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது. அதேசமயம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான இடைவெளி மிக குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளது. நேரடியாக திமுகவுக்கு இத்தனை சதவிகிதம் வாக்கு, அதிமுகவுக்கு இத்தனை சதவிகிதம் வாக்கு என தெரிவித்து, தாங்கள் ஜனநாயகத்தின 4வது தூண் என்பதை நிரூபிக்காமல் மக்களை வெகுவாக குழப்பி உள்ளது.

6) சிட்டிசன் ஃபாரம் (Citizen’s Forum – தமிழ்நாடு) என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனதலைவர் பஞ்சமூர்த்தி தாங்கள்  நேர்மையான முறையில் கருத்துக்கணிப்பை நடத்தியதாக தெரிவித்தார்.  அவரது நிறுவன கருத்துக்கணிப்பின்படி மொத்தமுள்ள  234 தொகுதிகளில்,  அதிமுக: 124 தொகுதிகளிலும், திமுக: 94 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களையும் கைப்பற்றும் என கூறியுள்ளார்.

7) தினமணி பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 122 இடங்களையும், திமுக கூட்டணி 111 இடங்களையும், அமமுக 1 இடத்தையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

9) ரிப்போர்ட்டர் வார பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 125 இடங்களிலும், திமுக கூட்டணி 109இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

9) ராஜ்டிவி  வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், அதிமுக 124 இடங்களிலும், திமுக 94 இடங்களையும் பிடிக்கும் என கூறியுள்ளது.

மேலும் பல ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், யுடியூப் சேனல்களும்,  அவர்களுக்கு  தோன்றிய வகையில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், அவர்களின் சொந்த கருத்துக்களை திணித்து வருகின்றன.

நாம் இங்கே குறிப்பிட்ட 9 நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளை உதாரணத்திற்காக மட்டுமே. பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவலைக்கொண்டு வெளியிட்டுள்ளோம். இதை வாசிப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்… சற்றே சிந்தித்து பாருங்கள்… 

இதில் எந்தவொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு உண்மையாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கு நாம் இன்னும் 41 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் இதுபோன்று பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. பெரும்பாலான ஊடகங்கள் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என ஆணித்தரமாக தங்களது கருத்துக்களை மக்களிடையே திணித்து வந்த நிலையில், தேர்தல் முடிவோ வேறுவிதமாக அமைந்தது. ஒரு சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.

ஆனால், தற்போதைய தேர்தல் களம் சற்று வித்தியாசமானதாகவே உள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மாபெரும் தலைவர்கள், மறைந்துவிட்ட நிலையில், அவர்களின் வாரிசுகள் களமிறங்கி உள்ளன. உள்ளுக்குள் எத்தனை குடுமிபிடி சண்டைகள் இருந்தாலும், தேர்தலை முன்னிட்டு, ஒற்றுமையாக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கி அதிமுக களத்தில் இறங்கி உள்ளது. அவர்களுக்கு சாதகமாக, சசிகலாவும் சற்றே அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். அதிமுக வாக்குகள் அமமுகவுக்கு பிரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சசிகலா டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத வரையில், அமமுகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஆனால், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அப்போது,  திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள், சட்டமன்ற தேர்தலிலும் கிடைக்கும் என திமுக கூட்டணியினர் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல…  ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசிய கட்சிகளுக்கானது. ஆனால் சட்டமன்ற தேர்தல் என்பது மாநில கட்சிகளுக்கானது. இதனால் மக்களின் மனநிலை வேறுபடும்.

இருந்தாலும், அதிகரித்து வரும் சமையல் கேஸ், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மளிகைப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், பொதுமக்கள்  பாஜக அரசு மீது அதிருப்தியுடனேயே இருந்து வருகின்றனர். மேலும் பாஜகவின் இந்துத்துவா செயல்பாடுகளும் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்துள்ளது. இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதும், அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இப்படியான ஒரு அரசியல் சூழலில், ஊடகங்களில் வெளியிடப்படும்  கருத்துக்கணிப்புகள்  மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் தள்ளி வருகிறது.  கருத்துக்கணிப்புகளை வெளியிடும் எந்தவொரு ஊடகமும் எத்தனை ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கேட்டோம் என்பதை பகிரங்கமாக வெளியிடுவதில்லை.  மாவட்டத்திற்கு சிலரை மட்டுமே பேட்டிக்கண்டு, அதையே பொதுமக்களின் கருத்துக்கணிப்பாக வெளியிடுகின்றன.

மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து முழுமையாக ஆராயாமல், கட்சிகளின்  வெற்றி தோல்விகளை ஊடகங்கள் மக்களிடையே திணிப்பது எந்த வகையில் நியாயம். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு  பதம் என்பதை சிலர் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், அது வேறு, இது வேறு என்பதை கவனத்தில் கொண்டால், இதுபோன்ற திணிப்புகள்  நடைபெறாது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்,  வாக்குகளை செலுத்த 6கோடியே 26லட்சத்து 74ஆயிரத்து 446 பேர் (6,26,74,446) தயாராக உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள், அதாவது, மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர்கள் மட்டும் 8லட்சத்து, 97ஆயிரத்து 694 (8,97,694) பேர். இவர்கள்தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகிறவர்கள்.  

உண்மையைச் சொல்லப்போனால், மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதுபோல,  கருத்துக் கணிப்புகளை கொஞ்சம் டீப்பாக அலசினால் பல நேரங்களில் தமாஷாகவே இருக்கும்.. யாருக்கும் தெளிவாக பதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காக மெனக்கெட்டு ஒரே கேள்வியை வகைவகையாய் பிரிப்பார்கள்., தேர்தலை பொருத்தவரை வாக்குப்பதிவுக்கு முந்தைய காலகட்டம் வரை தினமும் நிலைமை மாறிக் கொண்டே இருக்கும்..   இது தெரிந்த ஒரே காரணத்தினால்தான் அரசியல் தலைவர்கள் 24 மணி நேர பீதியோடு தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள் .

இதுதான் கருத்துக்கணிப்பின் உண்மையான கள நிலவரம்,

இதில் விசேஷம் என்னவென்றால், எந்தவொரு ஊடகமும், நேர்மையான முறையில், அதாவது, ஜனநாயகத்தின் நான்காவது தூண், பத்திரிகைகள், ஊடகங்கள் என்று கூறப்படும் வகையில், தங்களது பணிகளை செய்கின்றனவா – செயல்படுகின்றனவா?  இதை ஊடகத்தினர் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்…

கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் ஊடகங்கள் மக்களை ஏமாற்றுகிறதா? ஏமாளியாக்குகிறதா? என்பதை பொதுமக்களே…  நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்…